ஆண்களுக்கு இடையிலான உறவு இனி குற்றச்செயலாக வகைப்படுத்தப்படாது: பிரதமர்

ஆண்களுக்கு இடையிலான உறவு இனி குற்றச்செயலாக வகைப்படுத்தப்படாது: பிரதமர்

5 mins read
47ee9dff-cd12-48b7-8abb-cfcc380fb430
-

குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 377A நீக்கப்படும் என்று இன்று நடைபெற்ற தேசிய தின பேரணியில் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார். இதன் மூலம் ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவு குற்றச்செயலாக வகைப்படுத்தப்படாது.

ஆனால், அதே வேளையில், இச்சட்டம் நீக்கப்படுவதன்மூலம், சமுதாய நெறிகளில் பேரளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது எனப் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் அக்கறை கொண்டுள்ளனர். ஆதலால், நாம் 377A பிரிவை நீக்கினாலும்கூட, திருமணம் எனும் பந்தம் பேணிக் காக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

''பொது வீடமைப்பு, கல்வி, தத்தெடுப்பு விதிமுறைகள், விளம்பரத் தரநிலைகள், திரைப்பட வகைப்பாடுகள் உள்ளிட்ட பல தேசியக் கொள்கைகள், இந்த வகையான திருமண பந்தத்தின் அடிப்படையிலேயே வகுக்கப்பெறுகின்றன. பல தேசியக் கொள்கைகள், இந்தத் திருமண அமைப்பைச் சார்ந்து வகுக்கப்பட்டுள்ளன.

''இந்தத் திருமண பந்தத்தின் நிலையையோ, இந்தக் கொள்கைகளையோ மாற்ற அரசாங்கத்திற்கு எந்தவோர் எண்ணமும் கிடையாது,'' என்று பிரதமர் லீ சொன்னார்.

நாடாளுமன்றத்தில் இது குறித்து மேலும் விரிவான விவாதம் நடைபெறும் என்றும் குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 377A 'கட்டுப்பாடான, கவனமான' முறையில் நீக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

மாறிவரும் சமுதாய விழுமியங்களையும் வழக்கங்களையும் பிரதிபலிக்க, அவ்வப்போது நமது சட்டங்களையும் நடைமுறைகளையும் மாற்றியமைப்பது அரசாங்கத்தின் நுட்பமான பணிகளில் ஒன்றாகும் என்ற பிரதமர் கடந்த ஆண்டின் கூட்டத்தில், பொது மருத்துவமனைகளில் உள்ள தாதியர் தாங்கள் விரும்பினால், தங்கள் சீருடையுடன் தலையங்கியையும் அணிய அனுமதிக்கப்படுவர் என்று அறிவித்திருந்ததைச் சுட்டினார். அது பல ஆண்டுகளாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு என்றும் அவர் சொன்னார்.

பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தால் 1930களில் அறிமுகம் கண்ட சட்டம்

ஆண்களிடையே பாலியல் உறவைக் குற்றமாக்கும் குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 377A, பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கத்தால் 1930களில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதிருந்த பண்புநெறிகளையும் சமுதாயப் போக்குகளையும் அது பிரதிபலித்தது, ஆனால் கடந்த பல ஆண்டுகளில், ஓரினச்சேர்க்கை பற்றிய புரிந்துணர்வு அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் மேலும் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் உள்ளிட்ட பல சமுதாயங்களில், ஒத்த பாலீர்ப்புடைய ஆண்கள் இப்போது கூடுதலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்; புறக்கணிக்கப்பட்டு, இழிவுபடுத்தப்படுவதற்குப் பதிலாக ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டிருந்த பல நாடுகள் இப்போது அவற்றை நீக்கிவிட்டன.

ஆசிய நாடுகள் பல இச்சட்டத்தை நீக்கிவிட்டாலும் சிங்கப்பூர் இதுவரை அவ்வாறு செய்யல்வில்லை என்று பிரதமர் லீ விளக்கினார்.

குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 377A-வை நீக்குவது குறித்து, நாடாளுமன்றத்தில் 2007ஆம் ஆண்டில் கடைசியாக விவாதிக்கப்பட்டது. அப்போது நாடளுமன்ற உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவின.

குறிப்பாக முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள், பல புராட்டஸ்டண்ட் மதப் பிரிவுகள் உள்பட சில சமயக்குழுக்கள் இடையே அது குறித்து கவலை தெரிவித்தன. அதனால் குற்றவியல் சட்டத்தின் 377A பிரிவு சட்டப்புத்தகத்தில் இருக்கும் என்றும், அதைத் தீவிரமாக அமல்படுத்த வேண்டாம் என்றும் அரசாங்கம் அப்போது முடிவெடுத்தது என்று திரு லீ நினைவு கூர்ந்தார்.

மனப்போக்கு மாறிவிட்டது

இப்போது, மனப்போக்குகள் குறிப்பிடத்தக்க வகையில் மாறியுள்ளன என்றும் நாம் பழமை வாய்ந்த விழுமியங்களைக் கொண்ட சமுதாயமாக இருந்தாலும், இப்போது சிங்கப்பூரில், குறிப்பாக இளைய சிங்கப்பூரர்களிடையே, ஒத்த பாலீர்ப்புடைய ஆண்கள் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டார் திரு லீ.

''ஓரினச்சேர்க்கை சரியா அல்லது தவறா என்பது குறித்து சிங்கப்பூரர்கள் இன்னும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனர். ஆனால் ஒரு நபரின் பாலுணர்வும் நடத்தையும் அவருடைய சொந்த விஷயம் என்பதையும் ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவு ஒரு குற்றச்செயலாகக் கருதப்படக் கூடாது என்பதையும் பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்,'' என்று விவரித்தார் திரு லீ.

குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 377A நீக்கப்படக்கூடாது என்று விரும்புவோரில் பெரும்பாலானோரும்கூட, இச்சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படுவதையும் தண்டனைகள் விதிக்கப்படுவதையும் விரும்பவில்லை.

தேசிய அளவில், பெரியவர்கள் தனிப்பட்ட முறையில் பாலியல் உறவில் ஈடுபடுவது, எந்தவிதச் சட்ட ஒழுங்குப் பிரச்சினையையும் எழுப்புவதில்லை.

இந்தக் காரணங்களுக்காக, அரசாங்கம் குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 377A-வை நீக்கி, ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவைக் குற்றச்செயலாக வகைப்படுத்தாது என்று பிரதமர் லீ விளக்கினார்.

இது, தற்கால சமூகப் போக்குகளுக்கு ஏற்புடையதாகச் சட்டமாக இருக்கும் வேளையில் ஒத்த பாலீர்ப்புடைய ஆண் சிங்கப்பூரர்களுக்கு சிறிது மனநிம்மதியைத் தரும் என்று தாம் நம்புவதாகவும் பிரதமர் லீ சொன்னார்.

சிங்கப்பூரில் சட்டப்படி ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமணங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன.

இந்து ஆலோசனை மன்றத்தின் நிலைப்பாடு

கட்டாயம் அல்லது வற்புறுத்தலின்பேரில் இல்லாமல், தங்களது விருப்பத்துதுடனும் பரஸ்பர இணக்கத்துடனும் கூடியதாக இருக்கும் பட்சத்தில் தனிமனிதர்களின் நடத்தையானது அவர்களின் தனிப்பட்ட, சொந்த உரிமை என்பதால் 377A சட்டப்பிரிவு நீக்கப்பட வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்று இந்து ஆலோசனை மன்றம் தெரிவித்துள்ளது.

அதே வேளையில், திருமண உறவையும் 377A சட்டப்பிரிவு நீக்கத்தையும் தான் வெவ்வேறாகக் கருதுவதாலும் திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலேயே நிகழ வேண்டும் என்று தான் நம்புவதாலும் திருமண உறவைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மன்றம் வலியுறுத்தியுள்ளது.

அப்படி, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான திருமண உறவை முறைப்படுத்தவோ வலுப்படுத்தவோ எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தான் வரவேற்பதாக மன்றம் கூறியிருக்கிறது.

377A சட்டப்பிரிவு நீக்கப்படும் என்று பிரதமர் லீ அறிவித்ததை அடுத்து, இவ்விவகாரத்தில் இந்து ஆலோசனை மன்றத்தின் நிலைப்பாட்டைத் தமிழ் முரசு கேட்டறிந்தது.

ஓரினச் சேர்க்கையாளர்கள் தத்தெடுப்பு அல்லது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று குடும்பத்தை அமைப்பது குறித்துக் கேட்டதற்கு, தனிமனிதர்கள் இருவர் எவ்வாறு சேர்ந்து வாழ விரும்புகிறார்கள் என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என்று மன்றம் கூறியது.

இருப்பினும், திருமணம் புரிந்துகொண்டு, அவர்கள் தங்களது உறவுகளை முறைப்படுத்த விரும்பினால், அது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்றும் திருமணத்தின் மூலம் தொடங்கப்படும் ஒரு குடும்பமானது ஓர் ஆணையும் (தந்தை) பெண்ணையும் (தாய்) கொண்டதாகவே இருக்க வேண்டும் என்றும் மன்றம் குறிப்பிட்டது.

பள்ளிகளில் பாலியல் கல்வியின்மூலம், ஒருவரின் பாலியல் ஈர்ப்பைப் பொருட்படுத்தாது ஒவ்வொருவரும் கடவுளின் படைப்பு என்று கருதி, அவர்களை மதிப்பதற்குக் குழந்தைகளுக்குக் கற்றுத் தர வேண்டும் என்றும் அவ்வமைப்பு தெரிவித்தது.

தங்களது நடத்தை சட்டத்திற்குட்பட்டும் சமுதாயத்தில் பிறருக்குத் தீங்கு விளைவிக்காத வரையிலும், ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படியும் தாங்கள் விரும்புபவருடனும் வாழ உரிமை உள்ளது என்று மன்றம் கூறியது.