ஒன்றிணைந்த சமூகமாக இருப்பது அவசியம்

ஒன்றிணைந்த சமூகமாக இருப்பது அவசியம்

4 mins read
9c27ae82-fd52-4bba-831d-05733bb82b65
-

இர்­ஷாத் முஹம்­மது

துணைச் செய்தி ஆசி­ரி­யர்

அபா­யங்­கள் நிறைந்த இப்­போ­தைய உல­கச் சூழ­லில் ஒன்­றி­ணைந்த சமூ­க­மாக இருப்­பது அவ­சி­யம் என்­றும் இனம், சம­யம், வரு­மா­னம், சமூக வேற்­று­மை­கள், பிறப்­பி­டம் போன்­ற­வை நம்மைப் பிள­வு­படுத்­த­விடக்­கூ­டாது என்­றும் பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழ­லி­லி­ருந்து மீண்டு வரும் நிலை­யில் உல­கப் பிரச்­சி­னை­களால் உத்­தி­பூர்­வ­மா­க­வும் பொரு­ளி­யல் ரீதி­யா­க­வும் எழும் சவால்­களை எதிர்­கொள்ள ஒன்­றி­ணைந்த சமூ­க­மாக இருப்­பது அவ­சி­யம் என்று தமது 17வது தேசிய தினப் பேரணி உரை­யின் முக்­கி­யக் கருத்­தாக பிர­த­மர் வலி­யு­றுத்­தி­னார்.

தங்­க­ளின் சொந்த நலன்­க­ளுக்­காக நமது பல­வீ­னங்­க­ளைப் பயன்­ப­டுத்தி, நம்­மி­டம் ஆதிக்­கம் செலுத்த முய­லும் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக விழிப்­பு­டன் இருக்­கு­மாறு பிர­த­மர் கேட்­டுக்­கொண்­டார்.

இணை­யத்­தில் படிக்­கும் எல்­லா­வற்­றை­யும் நம்­பி­விட வேண்­டாம் என்று தமது சீன, ஆங்­கில உரை­க­ளின்­போது அவர் குறிப்­பிட்­டார்.

ஈராண்­டு­க­ளுக்­குப் பிறகு கிரு­மிப் பர­வ­லுக்கு முன்­பி­ருந்­த­தைப்­போல், தொழில்­நுட்­பக் கல்­விக் கழக மத்­தி­யக் கல்­லூரி வளா­கத்­தில் அரங்­கம் நிறைந்த பார்­வை­யா­ளர்­க­ளுக்­கு­முன் பிர­த­மர் தமது பேரணி உரையை நிகழ்த்­தி­னார்.

தேசிய சேவை­யின் முக்­கி­யத்­து­வத்தை நாம் அறிந்­தி­ருக்­க­ வேண்­டும் என்­றும் சிங்­கப்­பூர் ஆயு­தப்படை­யை­யும் உள்­து­றைக் குழுக்­களை­யும் வலு­வா­க­வும் நம்­ப­கத்­தன்­மை­யு­ட­னும் வைத்­தி­ருக்­க­வேண்­டும் என்ற அவர், நமது தற்­காப்பு நம் கையில்­தான் உள்­ளது என்­றும் வலி­யு­றுத்­தி­னார்.

அமெ­ரிக்­கா­விற்­கும் சீனா­விற்­கும் இடை­யில் மோச­ம­டைந்­து­வரும் உறவு, உக்­ரேன்­மீ­தான ரஷ்­யப் படை­யெ­டுப்பு, அத­னால் ர‌ஷ்­யா­விற்­கும் அமெ­ரிக்கா உட்­பட பல நாடு­க­ளுக்­கும் இடை­யில் ஏற்­பட்ட பகைமை போன்ற பிரச்­சி­னை­களை அவர் சுட்டினார்.

'எதிர்­கா­லத்தை உறு­தி­செய்­வோம்' என்­பது பிரதமரின் மலாய், சீன, ஆங்­கில உரை­க­ளின் கருப்­பொ­ரு­ளாக அமைந்தது.

அதன்­படி, சிங்­கப்­பூ­ரின் அடுத்த ஐம்­ப­தாண்­டு­க­ளுக்­கான திட்­டங்­கள் குறித்து அவர் பேசி­னார். நான்­காம் தலை­மு­றைத் தலை­மைத்­து­வம் சிங்­கப்­பூர் வர­லாற்­றின் அடுத்த அத்­தி­யா­யத்தை எழு­தத் தயா­ராக இருக்­கின்­றது என்று அவர் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ரின் கனவு மெய்ப்­ப­ட­வும் நாம் காண விரும்­பும் சிங்­கப்­பூரை உரு­வாக்க ஒரு­மித்த முடிவை எடுக்­க­வும் 'முன்­னே­றும் சிங்­கப்­பூர்' திட்­டத்தை துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தொடங்­கி­யுள்­ளதை அவர் சுட்­டிக் காட்­டி­னார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் என்று நம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொள்­வ­தில் பெரு­மைகொள்­ள­ வேண்­டும் என்றும் தேசிய அடை­யா­ளத்தை வலுப்­ப­டுத்­த­ வேண்­டும் என்­றும் பிர­த­மர் அறை­கூ­வல் விடுத்­தார்.

"நம்முடைய பல்­லி­னக் கலா­சா­ரங்­களும் சமய மர­பு­களும் நமது அடை­யா­ளத்­தின் முக்­கிய அங்­கம் என்­றா­லும், முத­லில் நாம் சிங்­கப்­பூ­ரர்­கள்," என்­றார் அவர்.

"நாம் சிங்­கப்­பூ­ரர்­கள். அத­னால் நாம் பெரு­மைப்­ப­டக்­கூ­டிய இல்­லத்தைக் கட்ட ஒன்­றி­ணைந்து உழைப்­பதை ஒரு­போ­தும் நிறுத்த மாட்­டோம்," என்­றும் அவர் சொன்­னார்.

சவால்­களை எதிர்­கொண்டு வெற்­றி­காண்பதற்கு ஒன்­றி­ணைந்த மக்­கள், திறன்­மிக்க தலை­மைத்­து­வக் குழு, மக்­க­ளுக்­கும் தலை­வர்­க­ளுக்­கும் இடை­யி­லான மிகுந்த நம்­ப­கத்­தன்மை ஆகிய மூன்று அடிப்­ப­டைக்­கூ­று­களும் மிக அவ­சி­யம் என்­றார் பிர­த­மர்.

சிறிய நாடு என்­ப­தால் தவ­று­களுக்­குத் துளி­யும் இட­மில்லை என்று எச்­ச­ரித்த திரு லீ, சிங்­கப்­பூர் நிலைத்திருக்க சரி­யான தலை­வர்­கள் தேவை என்றார்.

'4ஜி குழுவிற்கு ஆதரவு தருக'

இது­வரை 57 ஆண்­டு­களில் மூன்று தலை­மு­றை­யாக சிங்­கப்­பூரர்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெற்ற தலை­வர்­கள் கிடைத்­துள்­ள­னர் என்ற பிரதமர், வெற்­றிக்­கான நமது வழி­மு­றையை அடுத்த தலை­முறைக்­கும் அத­னைத் தாண்­டி­யும் நீட்­டிக்க வேண்­டி­யது நமது கடமை என்­றார்.

அத­னால் தலை­மைத்­துவ மாற்­றம் மிக முக்­கி­யம் என்று அவர் சொன்­னார்.

அடுத்த பிர­த­மரை அடை­யா­ளம் காணும் திட்­டம் கொவிட்-19 சூழ­லால் தள்ளிப்­போ­னா­லும் துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங்கை தங்­க­ளது தலை­வ­ராக இளைய அமைச்­சர்­கள் ஏற்­றுள்­ளதை அடுத்து தற்­போது அது தீர்க்­கப்­பட்­ட­தில் மகிழ்ச்­சி­ய­டை­வதாக திரு லீ கூறி­னார்.

திரு வோங்கிற்கும் அவ­ரது தலை­மைத்­து­வக் குழு­வி­ன­ருக்­கும் சிங்­கப்­பூ­ரர்­கள் ஆத­ர­வ­ளித்து வரு­வது மகிழ்ச்சி தரு­வதாகக் குறிப்பிட்ட அவர், அந்த '4ஜி' குழு­விற்கு மக்கள் தங்­க­ளின் முழு ஆத­ரவை வழங்­கு­மாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

சாங்கி ஐந்­தாம் முனை­யம், சாங்கி ஈஸ்ட் நகர்ப்­புற வட்­டா­ரம், துவாஸ் கப்­பல் நிறுத்­து­மி­டம், பாய லேபார் மறு­மேம்­பாடு போன்ற திட்­டங்­கள் குறித்த அண்­மைய தக­வல்­க­ளை­யும் தமது உரை­யின்­போது அவர் விரி­வாக விளக்­கினார்.

உள்­நாட்டு விவ­கா­ரங்­கள் குறித்த பல்­வேறு அம்­சங்­களும் பிர­த­ம­ரின் உரை­யில் இடம்­பெற்­றன.

அதி­க­ரித்­து­வ­ரும் வாழ்க்­கைச் செல­வி­னம், அதனை எதிர்­கொள்ள நடுத்­தர, குறைந்த வரு­மா­ன­முள்ள குடும்­பங்­க­ளுக்கு அர­சாங்­கம் வழங்­கி­வ­ரும் ரொக்க வழங்­கீ­டு­கள், பற்­றுச்­சீட்­டு­கள் உள்­ளிட்ட பல ஆத­ர­வுத் திட்­டங்­களை அவர் சுட்­டிக்­காட்­டி­னார். விலை­யேற்­றம் தொடர்ந்­தால் மேலும் உதவ தயா­ராக இருப்­ப­தா­க­வும் அவர் உறுதி அளித்­தார்.

உல­க­ள­வில் பொரு­ளி­யல் நிலை மாறி­வ­ரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், இது­வரை நாம் கண்ட முழு­வீச்­சில் இடம்­பெற்ற உல­க­ம­ய­மா­தல், பெரு­கி­வந்த அனைத்­து­லக வணி­கம் போன்­ற­வற்றை இனி எதிர்­பார்க்க முடி­யாது என்­றார்.

"நாடு­கள் தங்­க­ளின் சொந்தத் தேவை­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கின்­றன. உல­க­ள­வில் பண­வீக்­கம் அதி­க­ரித்­து­ வ­ரு­கிறது. இப்­ப­டிப்­பட்ட சூழ­லில் பொரு­ளி­யல் மேம்­பாட்­டி­லும் மறு­சீ­ர­மைப்­பிலும் நாம் கவ­னம் செலுத்­த­ வேண்­டும்," என்று பிர­த­மர் வலி­யுறுத்­திச் சொன்­னார்.

பிரதமர் உரையின் முக்கிய அம்சங்கள்

♦ பெரும்பாலான உட்புறங்களில் கட்டாய முகக்கவச விதிமுறை தளர்த்தப்படும்

♦ ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவைக் குற்றமாக வகைப்படுத்தும் 377A சட்டப்பிரிவு நீக்கப்படும்

♦ வெளிப்புறச் சூழல்களால் ஏற்படும் அபாயங்களையும் பொருளியல் சவால்களையும் எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வலியுறுத்து

♦ பாய லேபார் ஆகாயப் படைத்தளம் இடமாற்றம் செய்யப்பட்டு, அவ்விடத்தில் 150,000 வீடுகள் கட்டப்படும்

♦ சாங்கி 5ஆம் முனையக் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கும். துவாஸ் துறைமுகத்தின் முதற்கட்டப் பணிகள் முடிவடைந்த நிலையில், மேலும் மூன்று கட்டப் பணிகள் அடுத்த 20 ஆண்டுகளில் முடிவுறும்

♦ உலகம் முழுவதுமிருந்தும் சிறந்த திறனாளர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்

♦ சவால்களை எதிர்கொள்ள, மூன்று முக்கியமான அடிப்படைக்கூறுகளை சரியாக வைத்திருத்தல்

பிரதமரின் தேசிய தினப் பேரணி உரை 2022: சவால்களை எதிர்கொள்ள ஆயத்தமாகும்படி வலியுறுத்து