ஆண்-ஆண் பாலியல் உறவைக் குற்றமாக வகைப்படுத்தும் 377ஏ சட்டப்பிரிவு நீக்கப்படும்

ஆண்-ஆண் பாலியல் உறவைக் குற்றமாக வகைப்படுத்தும் 377ஏ சட்டப்பிரிவு நீக்கப்படும்

3 mins read

ஆண்­க­ளுக்கு இடை­யி­லான பாலி­யல் உற­வைக் குற்­ற­மா­கக் கரு­தும் 377A சட்­டப் பிரிவு நீக்­கப்­படும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

அதே நேரத்­தில், அச்­சட்­டப்­பிரிவு நீக்­கப்­பட்­டா­லும் திரு­ம­ணம் எனும் பந்­தம் பேணிக்­காக்­கப்­படும் என்று பிர­த­மர் கூறி­யி­ருக்­கி­றார்.

கடந்த பல ஆண்­டு­க­ளாக, ஓரினச் சேர்க்கை பற்­றிய புரிந்­து­ணர்வு அறி­வி­யல் ரீதி­யா­க­வும் மருத்­துவ ரீதி­யா­க­வும் மேலும் கூடி­யுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட திரு லீ, சிங்­கப்­பூர் உள்­ளிட்ட பல சமு­தா­யங்­களில் ஒத்த பாலீர்ப்­பு­டைய ஆண்­கள் இப்­போது கூடு­த­லாக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கி­றார்­கள் என்று சொன்­னார்.

குற்­ற­வி­யல் சட்­டத்­தின் 377A பிரிவை நீக்­கு­வது குறித்து, கடை­சி­யாக 2007ஆம் ஆண்டு நாடாளு­மன்­றத்­தில் விவா­திக்­கப்­பட்­டது. ஓரி­னச் சேர்க்­கையை அனை­வ­ரும் ஏற்­றுக்­கொள்ள மாட்­டா­ர்கள் என்­ப­தால் அச்­சட்­டப்­பி­ரிவு சட்­டப் புத்­த­கத்­தில் இருக்­கும் என்­றும் அதைத் தீவி­ர­மாக அமல்­ப­டுத்த வேண்­டாம் என்­றும் அர­சாங்­கம் அப்­போது முடி­வெ­டுத்­தது.

ஆனால் இப்­போது 15 ஆண்டு­களுக்­குப் பிறகு, மனப்­போக்­கு­கள் குறிப்­பி­டத்­தக்க வகை­யில் மாறி­ உள்­ள­தா­கப் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

இத­னை­ய­டுத்து, அர­சாங்­கம் 377A பிரிவை நீக்கி, ஆண்­க­ளுக்கு இடை­யி­லான பாலி­யல் உற­வைக் குற்­றச்­செ­ய­லாக வகைப்­ப­டுத்­தாது என்று திரு லீ தெரி­வித்­தார்.

"பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­கள் இதை ஏற்­றுக்­கொள்­வார்­கள். எனவே, இவ்­வாறு செய்­வது சரி­யென்று நம்­பு­கி­றேன். இது, தற்­காலப் போக்­குக்கு ஏற்­பு­டை­ய­தா­கச் சட்­டத்­தைக் கொண்­டு­வ­ரும்; ஒத்த பாலீர்ப்­பு­டைய ஆண் சிங்­கப்­பூ­ரர்­களுக்­குச் சற்று மன­நிம்­மதி தரும் என்று நம்­பு­கி­றேன்," என்­றார் அவர்.

அதே வேளை­யில், இச்­சட்­டப்­பி­ரிவு நீக்­கப்­ப­டு­வ­தன்­மூ­லம் சமு­தாய நெறி­களில் பெரும் மாற்­றங்­கள் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது எனப் பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­கள் அக்­கறை கொண்­டுள்­ள­தை­யும் அவர் சுட்­டி­னார்.

தற்­போ­துள்ள குடும்­பம் சார்ந்த நமது அணு­கு­மு­றை­யும் சிங்­கப்­பூர் சமு­தா­யத்­தில் ஏற்­கெ­னவே உள்ள வழக்­கங்­களும் விழு­மி­யங்­களும் தொடர்ந்து கட்­டிக்­காக்­கப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரில் ஓர் ஆணுக்­கும் பெண்­ணுக்­கும் இடை­யி­லான திரு­மணங்­கள் மட்­டுமே சட்­டப்­படி அங்கீ­க­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இந்­த நிலையில், திரு­மண உற­வின் இந்த நிலைப்­பாடு அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின்­கீழ் நீதி­மன்­றங்­களில் எதிர்க்­கப்­ப­ட­லாம் என்று அவர் சொன்னார்.

"சிங்­கப்­பூ­ரைப் பொறுத்­த­வரை இவை சட்­டப் பிரச்­சி­னை­கள் அல்ல, அர­சி­யல் பிரச்­சி­னை­கள் என்­ப­தால், இத்­த­கைய விவ­கா­ரங்­கள் குறித்து முடி­வெ­டுக்க நீதி­மன்­றங்­கள் தகுந்த தள­மல்ல என்று நான் கரு­து­கிறேன்," என்­றார் திரு லீ.

ஆகை­யால், நீதி­மன்­றங்­களில் அர­சி­ய­ல­மைப்­புச் சட்ட அடிப்­ப­டை­யில் இந்­தச் சட்­ட­பூர்வ திரு­மண அமைப்­பு­முறை எதிர்க்­கப்­ப­டு­வ­தில் இருந்து அர­சாங்­கம் அத­னைப் பாது­காக்­கும் என்­றும் அதற்­காக அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தில் திருத்­தம் செய்­வோம் என்­றும் அவர் சொன்­னார்.

இச்சட்டம் தொடர்பில் நாடா­ளு­மன்­றத்­தில் முழு­மை­யான விவா­தத்தை மேற்­கொள்­வோம் என்­றும் பிர­த­மர் கூறி­னார்.

இந்து ஆலோசனை மன்றத்தின் நிலைப்பாடு

கட்­டா­யம் அல்­லது வற்­பு­றுத்­த­லின்­பே­ரில் இல்­லா­மல், தங்­க­ளது விருப்­பத்­து­ட­னும் பரஸ்­பர இணக்­கத்­து­ட­னும் கூடி­ய­தாக இருக்­கும் பட்­சத்­தில் தனி­ம­னி­தர்­க­ளின் நடத்­தை­யா­னது அவர்­க­ளின் தனிப்­பட்ட, சொந்த உரிமை என்­ப­தால் 377A சட்­டப்­பி­ரிவு நீக்­கப்­பட வேண்­டும் என்­பதே தங்­க­ளின் நிலைப்­பாடு என இந்து ஆலோ­சனை மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

ஆயினும், திரு­மண உற­வை­யும் 377A சட்­டப்­பி­ரிவு நீக்­கத்­தை­யும் தான் வெவ்­வே­றா­கக் கரு­து­வ­தா­லும் திரு­ம­ணம் என்­பது ஓர் ஆணுக்­கும் பெண்­ணுக்­கும் இடை­யி­லேயே நிகழ வேண்­டும் என்று தான் நம்­பு­வதா­லும் திரு­மண உற­வைப் பாது­காக்க மன்­றம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அப்­படி, ஆணுக்­கும் பெண்­ணுக்­கும் இடை­யி­லான திரு­மண உறவை முறைப்­ப­டுத்­தவோ வலுப்­படுத்­தவோ எடுக்­கும் எந்­த­வொரு நட­வ­டிக்­கை­யை­யும் தான் வர­வேற்­ப­தாக மன்­றம் கூறி­யது.

377A சட்­டப்­பி­ரிவு நீக்­கப்­படும் என்று பிர­த­மர் லீ அறி­வித்­ததை அடுத்து, இவ்­வி­வ­கா­ரத்­தில் மன்­றத்­தின் நிலைப்­பாட்­டைத் தமிழ் முரசு கேட்­ட­றிந்­தது.

பள்­ளி­களில் பாலி­யல் கல்­வி­யின்­மூ­லம், ஒரு­வ­ரின் பாலி­யல் ஈர்ப்­பைப் பொருட்­ப­டுத்­தாது ஒவ்­வொ­ரு­வ­ரும் கட­வு­ளின் படைப்பு என்று கருதி, அவர்­களை மதிப்­ப­தற்­குக் குழந்­தை­க­ளுக்­குக் கற்­றுத் தர வேண்­டும் என்­றும் அந்த மன்றம் தெரி­வித்­தது.