பொதுப் போக்குவரத்து மற்றும் மருத்துவமனை போன்ற சுகாதாரப் பராமரிப்பிடங்கள் தவிர்த்து, மற்ற இடங்களில் கட்டாய முகக்கவச விதிமுறை விரைவில் தளர்த்தப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கொவிட்-19 பரவல் மட்டுப்பட்டுள்ளதால், முகக்கவச விதிமுறைகள் தளர்த்தப் படவிருப்பதாக தமது தேசிய தினப் பேரணி உரையில் திரு லீ, குறிப்பிட்டார்.
"ஆனாலும், இப்போதே முகக்கவசத்தைக் கழற்றிவிடாதீர்கள்," என்ற பிரதமர், அதுகுறித்த விவரங்களை கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு அறிவிக்கும் என்று சொன்னார்.
இப்போது, வெளிப்புறங்களில் முகக்கவசம் கட்டாயமில்லை என்றபோதும் கடைத்தொகுதி போன்ற உட்புறங்களில் இருக்கும்போது கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
இவ்விதி தளர்த்தப்பட்டபின், பெரும்பாலான உட்புறங்களில் முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
ஆயினும், பொதுப் போக்குவரத்தில் செல்லும்போதும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், தாதிமை இல்லங்கள் போன்ற இடங்களிலும் கட்டாய முகக்கவச விதிமுறை தொடரும் என்று திரு லீ தெரிவித்தார்.
குறிப்பாக பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும்போது முகக்கவசம் அணியத் தேவையிராது என்று அவர் சொன்னார்.
"தங்கள் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களின் முகபாவனைகளைப் பார்க்க வேண்டியது அவசியம். கற்றலுக்கும் வளர்ச்சிக்கும் அது மிக முக்கியம்," என்றார் பிரதமர்.
மற்ற நாடுகளைப்போல கொவிட்-19 தொற்று பாதிப்பு மிகுந்த ஏற்ற இறக்கத்துடன் இல்லாமல், சிங்கப்பூரில் கொரோனா அலையின் ஏற்ற இறக்கம் மிதமான அளவிலேயே இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய ஓமிக்ரான் பிஏ.5 திரிபு அலையும் தணிந்துவருவதாகவும் அவர் சொன்னார்.
சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் 1,600க்கும் குறைவான மரணங்களே பதிவாகி இருப்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
மற்ற நாடுகளைப்போல் இங்கும் அதிக மரணங்கள் பதிவாகியிருக்கக்கூடும் என்ற அவர், "பத்தாயிரம் பேர் அல்லது அதற்கும் மேலானோர் கொவிட்-19 தொற்றால் இறந்திருக்கக்கூடும். நமது கூட்டு முயற்சிகள் பல உயிர்களைக் காத்துள்ளன," என்று பிரதமர் லீ குறிப்பிட்டார்.

