சிங்கப்பூரில் பயனீட்டுப் பொருட்களின் விலை சென்ற மாதம் மிக அதிகமாகக் கூடியது. மூலாதாரப் பணவீக்கம் 4.8% ஆக உயர்ந்தது. இது ஜூனில் 4.4% ஆக இருந்தது.
மூலாதாரப் பணவீக்கம் இதற்கு முன் 2008ஆம் ஆண்டு நவம்பரில்தான் ஆக அதிகமாக, அதாவது 5.5% ஆக இருந்தது. அதற்குப் பிறகு சென்ற மாதம் அது மிக அதிகமாகக் கூடிவிட்டது.
மூலாதாரப் பணவீக்கம் என்பது, தனியார் போக்குவரத்து, குடியிருப்பு ஆகியவற்றுக்கு ஆகும் செலவுகளை நீக்கிவிட்டு கணக்கிடப்படு வதாகும். உணவு, மின்சாரம், எரிவாயு ஆகியவற்றுக்கான செலவு கூடியதே பணவீக்கம் அந்த அளவுக்கு ஏறியதற்குக் காரணம்.
ஜூலை மாதம் பணவீக்கம் 4.7% ஆக இருக்கும் என்று புளூம்பர்க் நிறுவனம் கணித்து இருந்தது. ஆனால் அந்தக் கணிப்பைவிட பணவீக்கம் கூடிவிட்டது.
இதனிடையே, ஜூலை மாதம் ஒட்டுமொத்த பணவீக்கம் 7% ஆக இருந்தது. இதுவும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஅதிகம்.
இதற்கு முன்னதாக 2008 ஜூலையில்தான் இந்தப் பணவீக்கம் 7.5% ஆக இருந்தது.
தனியார் போக்குவரத்து, குடியிருப்புச் செலவுகள் அதிகரித்ததே ஒட்டுமொத்த பணவீக்க அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது.
சிங்கப்பூர் நாணய ஆணையம், வர்த்தக தொழில் அமைச்சு ஆகியவை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இந்த நிலவரங்கள் தெரியவந்தன.
கடந்த ஜூன் மாதம் 5.4% ஆக இருந்த உணவு பணவீக்கம், ஜூலையில் 6.1% ஆகியது. அதேபோல, மின்சாரம், எரிவாயு செலவு ஜூலையில் 24% அதிகரித்தது.
குடியிருப்புப் பணவீக்கம் 4.6% ஆக இருந்தது. அதேவேளையில், தனியார் போக்குவரத்துச் செலவுகள் 22.2% கூடின. சேவைத் துறையின் பணவீக்கம் கொஞ்சம் அதிகரித்து 3.5% ஆகியது.
வெளிநோயாளிச் சேவைகள், விமானக் கட்டணங்கள், பொழுதுபோக்கு, கலாசாரச் சேவைகள் ஆகியவற்றுக்கான செலவு கூடியதே இதற்கான காரணம்.
சில்லறை வர்த்தகம், இதர பொருள்களைப் பொறுத்தவரை, விலைவாசி உயர்வு 2.8% ஆக இருந்தது. என்றாலும் ஜூன் மாத அளவான 3.1%ஐ விட இது குறைவு.
இதனிடையே, வரும் மாதங்களிலும் பணவீக்க நெருக்கடிகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்று ஆணையமும் அமைச்சும் தெரிவித்து இருக்கின்றன.
இந்த ஆண்டு முழுவதற்கும் ஒட்டுமொத்த பணவீக்கம் 5% முதல் 6% வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. அதேவேளையில், மூலாதாரப் பணவீக்கம் 3% முதல் 4% வரை இருக்கும் என்பது கணிப்பாக உள்ளது.

