சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டத்துக்குப் புத்துயிர் அளிப்பது பற்றி சிங்கப்பூருடன் மலேசியா விவாதித்து வருகிறது.
மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று இதனை தெரிவித்தார். சிங்கப்பூருடன் சேர்ந்து செயல்பட்டு அந்தத் திட்டத் திற்குக் கூடிய விரைவில் புத்துயிர் அளிப்பதற்கான முயற்சிகளை வேகப்படுத்தலாம் என்று மலேசியா நம்புவதாக பிரதமர் கூறினார்.
மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் இந்த விவகாரம் பற்றி சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனுடன் விவாதித்து வருவதாக மலேசிய பிரதமர் தெரிவித்தார். கோலாலம்பூரில் பெர்னாமா செய்தி நிறுவனத்திற்கும் இதர வெளிநாட்டு ஊடகங்களுக்கும் திரு இஸ்மாயில் பேட்டியளித்தார்.
வேக ரயில் திட்டம் புத்துயிர் பெற்றால் நிபந்தனைகளில் சில மாற்றங்கள் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
"தொடர்ந்து விவாதிப்பு நடந்து வருகிறது. சாத்தியமானால் அதை வேகப்படுத்த விரும்புவோம். கோலாலம்பூருக்கும் பேங்காக்கிற்கும் இடையில் அதிவேக ரயில் சேவை எதையும் அமைப்பதற்கான திட்டம் எதுவும் மலேசியாவிடம் இல்லை என்பதே காரணம்," எனப் பிரதமர் கூறியதாக பெர்னாமா கூறியது.
அப்படி அமையக்கூடிய ரயில் பாதை சீனா வரை நீளக்கூடும் என்றும் திரு இஸ்மாயில் கூறினார்.
சீனாவும் தாய்லாந்தும் அதிவேக வழித்தடங்களை அமைக்கும் நடைமுறைகளில் ஈடுபட்டு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் அதிவேக ரயில் சேவையை ஏற்படுத்துவதற்கான சட்டபூர்வமான இரு தரப்பு உடன்பாட்டில் 2016 டிசம்பரில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங் அப்போது மலேசிய பிரதமராக இருந்த நஜிப் ரசாக் இருவர் முன்னிலையில் அந்த உடன்பாடு கையெழுத்தானது.
அந்தத் திட்டம் தொடர்பான பணிகளைச் சிங்கப்பூர் தொடங்கியது. ஆனால் மலேசிய வேண்டு கோளின் பெயரில் அந்த ரயில் திட்டம் பிறகு நிறுத்திவைக்கப்பட்டது. 2018 மே மாதம் மலேசியாவில் நடந்த பொதுத் தேர்தலில் அரசாங்க மாற்றம் ஏற்பட்டதே அதற்கான காரணம்.
பின்னர் அந்தத் திட்டத்தை சுமார் இரண்டாண்டு காலம் நிறுத்தி வைக்க 2018 செப்டம்பரில் இரு நாடுகளும் இணங்கின.
அப்போது சிங்கப்பூருக்கு தான் கொடுக்க வேண்டி இருந்த $15 மில்லியன் செலவுத் தொகையை மலேசியா கொடுத்தது.
அந்தத் திட்டத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை மேலும் ஏழு மாத காலத்திற்கு நிறுத்திவைக்க 2020 மே 31ஆம் தேதி சிங்கப்பூர் ஒப்புக்கொண்டது.
பிறகு இரு தரப்புகளும் குறிப்பிட்ட கால வரையறைக்குள் ஓர் உடன்பாட்டிற்கு வரத் தவறியதை அடுத்து அந்தத் திட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
அதனையடுத்து மலேசியா சிங்கப்பூருக்கு இழப்பீடாக ஏறத்தாழ $102 மில்லியன் கொடுத்ததாக ஒரு கூட்டறிக்கை மூலம் அறி விக்கப் பட்டது.
பிறகு சிங்கப்பூரில் நடந்த இரு தரப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட மலேசியப் பிரதமர் திரு இஸ்மாயில், அந்த ரயில் திட்டத்துக்குப் புத்துயிர் அளிக்கலாம் என்று யோசனை கூறியதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்தார்.
அந்தத் திட்டம் பற்றிய புதிய யோசனைகளை மலேசியாவிடம் இருந்து சிங்கப்பூர் வரவேற்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மலேசியப் பிரதமரின் செய்தி வெளியாகி உள்ளது.