கூகல் நிறுவனம் சிங்கப்பூரில் அதன் மூன்றாவது கணினித் தகவல் மையத்தை அமைத்து முடித்து இருக்கிறது. இதனையும் சேர்த்து கூகல் நிறுவனம் சிங்கப்பூரில் அத்தகைய நிலையங்களில் மொத்தம் US$850 மில்லியன் (S$1.19 பில்லியன்) முதலீடு செய்து இருக்கிறது.
கூகல் நிறுவனத்தின் 3வது கணினித் தகவல் மையம் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டு இருப்பதை அடுத்து இந்த வட்டாரத்தில் 2.5 பில்லியன் மக்களுக்குக் கூகல் சேவைகள் நம்பத்தகுந்த முறையில் கிடைக்க வழி ஏற்பட்டு உள்ளது.
கூகல் 15 ஆண்டுகாலமாக சிங்கப்பூரில் செயல்படுகிறது.
சிங்கப்பூர் மீதான தனது கடப்பாட்டை கூகல் மேலும் உறுதிப்படுத்தி வருகிறது.
நிதி, சுற்றுச்சூழல், சுகாதாரப் பராமரிப்பு ஆகிய துறைகளில் இயந்திர மனிதன் தொழில்நுட்பப் பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்துவதற்கான ஒரு பங்காளித்துவ உடன்பாட்டின் மூலம் இணையப் பாதுகாப்பு பற்றி 50,000 பெற்றோர், பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய ஒரு செயல்திட்டம் உள்ளிட்ட பல செயல்திட்டங்களைப் புதிதாக கூகல் தொடங்கியுள்ளது.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
"தென்கிழக்கு ஆசியாவின் மின்னிலக்கப் பொருளியல் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.
"அதன்மூலம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்ளக்கூடிய நிலையில் சிங்கப்பூர் இருக்கிறது.
"வர்த்தகத்திற்கும் திறனாளிகள் பரிமாற்றத்திற்கும் மையம் என்ற சிங்கப்பூரின் நிலை மேம்படும்.
"சிங்கப்பூர் பல நாடுகளுடன் மின்னிலக்க உடன்பாடுகளைச் செய்து கொண்டு இருக்கிறது.
"அவை எல்லாம் இந்த இலக்கு நிறைவேற உதவும்," என்றார் திரு வோங்.
கூகல் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் சேர்ந்து செயல்படுவதால் சிங்கப்பூரின் தொழில்நுட்ப வளம் பலப்படும். குறிப்பாக தேர்ச்சிகள், புத்தாக்கம், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் அந்த வளம் வலுவடையும் என்று துணைப் பிரதமர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த வட்டாரத்திற்கும் உலகிற்கும் சிங்கப்பூர் தொழில்நுட்ப தலைமைத்துவ நாடாகத் திகழ்வதாகவும் இதில் கூகல் நிறுவனம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் கூகல் ஆசிய பசிபிக்கின் தலைவர் ஸ்கூட் பியூமண்ட் கூறினார். இந்த நம்பிக்கை மூன்றாவது இணையத் தகவல் மையம் மூலம் வெளிப்படுவதாக அவர் கூறினார்.

