பொதுப் போக்குவரத்திலும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களிலும் கட்டாய முகக்கவச நடைமுறை தொடரும்
வரும் திங்கட்கிழமை 29ஆம் தேதியில் இருந்து, பெரும்பாலான உட்புறங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணியத் தேவையில்லை.
மருத்துவமனைகள், மருந்தகங்கள், தாதிமை இல்லங்கள், அவசர மருத்துவ வாகனங்கள் போன்ற சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களில் கட்டாய முகக்கவச நடைமுறை தொடரும்.
அதேபோல எம்ஆர்டி, எல்ஆர்டி, பொதுப் பேருந்துகள் ஆகியவற்றில் பயணம் செய்யும்போதும் எம்ஆர்டி, எல்ஆர்டி, பேருந்துச் சந்திப்பு நிலையங்களில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டியது அவசியம்.
விமான நிலையங்களிலும் பள்ளிப் பேருந்துகள், தனியார்ப் பேருந்து சேவைகள், டாக்சிகள் போன்ற தனியார்ப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை.
பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருக்கத் தேவையில்லை.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்தத் தளர்வுகளை அறிவித்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது தேசிய தினப் பேரணி உரையின்போது பிரதமர் லீ சியன் லூங் முகக்கவச விதித் தளர்வுகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.
உணவங்காடி நிலையங்கள், காப்பிக்கடைகள், உணவகங்கள், பேரங்காடிகள், வணிகச் சந்தைகள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், இறைச்சிக்கூடங்கள் ஆகியவற்றில் பணிபுரிவோர் முகக்கவசம் அணிய வேண்டும். கடந்த 2020 ஏப்ரல் மாதம் முதல் உணவைக் கையாளும் வேலைசெய்யும் அனைவரும் முகக்கவசம் அல்லது உமிழ்நீர்த் தடுப்பான் அணிந்திருக்க வேண்டியதைச் சிங்கப்பூர் உணவு அமைப்பு கட்டாயமாக்கி இருப்பது நினைவுகூரத்தக்கது.
மக்கள்தொகையில் பெரும்பாலோர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாலும் ஏற்கெனவே அதிகமானோரை கொரோனா தொற்றிவிட்டதாலும் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதாக சுகாதார அமைச்சு கூறியது.
மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினரை கொரோனா தொற்றிவிட்டது என்றும் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டனர் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கையும் சீராகக் குறைந்து வருகிறது.
அத்துடன், கிருமித்தொற்றுக்காக நாள்தோறும் மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை கடந்த ஜூலையில் 800க்கும் அதிகமாக இருந்த நிலையில், இப்போது 400க்கும்கீழ் குறைந்துள்ளது.
இருந்தாலும், கூட்டமான இடங்களில் இருக்கும்போது அல்லது எளிதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளோருடன் கலந்துறவாடும்போது முகக்கவசம் அணியுமாறு அமைச்சுகள்நிலை பணிக்குழு அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, முதியவர்களும் நோயெதிர்ப்பாற்றல் குறைவாக இருப்போரும் கூட்டமான இடங்களில் இருக்கும்போது எவ்வகை சுவாசத்தொற்றுக்கும் ஆளாவதைத் தடுக்க முகக்கவசம் அணியும்படி வல்லுநர்கள் அறிவுறுத்துவதாக சுகாதார அமைச்சு கூறியது.
இப்போது கொவிட்-19 பரவல் கட்டுக்குள் இருந்தாலும் அடுத்த கொவிட்-19 திரிபு கடுமையானதாகவும் ஆபத்துமிக்கதாகவும் இருக்கலாம் என்பதால் எந்தவொரு திடீர் மாற்றத்தையும் எதிர்கொள்ள சிங்கப்பூரர்கள் மனத்தளவில் தயாராக இருக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தியுள்ளார்.
கொவிட்-19 தொற்றைப் பொறுத்தமட்டில் தடுப்பூசியே முதன்மையான தற்காப்பு ஆயுதமாகத் திகழ்கிறது என்று அமைச்சுகள்நிலை பணிக்குழு குறிப்பிட்டது.
"கடுமையான கொவிட்-19 தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்த வழி. அதனால், நாளிதுவரைக்கும் ஏற்ற வகையில் நமது தடுப்பூசிகளை வைத்திருக்கும் நிலைக்கு மாற நமது தடுப்பூசிக் கொள்கையை மறுஆய்வு செய்து வருகிறோம்," என்று நிதி அமைச்சருமான திரு வோங் கூறினார்.
அதனால், தடுப்பூசி அடிப்படையிலான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளில் மாற்றமேதும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

