எதிர்கொள்ளத் தயாராக இருக்கும்படி அமைச்சர் ஓங் அறைகூவல்
இப்போதைய கொவிட்-19 அலை தணிந்துள்ள நிலையில், ஆண்டு இறுதியில் புதிய தொற்று அலை உருவாகலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கிட்டத்தட்ட பத்தில் ஏழு பேரை கொவிட்-19 தொற்றிவிட்ட நிலையில், அடுத்த பெரிய அலைக்கு மறுதொற்று காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கவலை தரக்கூடிய புதிய கொவிட்-19 கிருமித் திரிபு, முன்னர் கிருமித்தொற்றுக்கு ஆளானதன் மூலம் பெற்ற நோயெதிர்ப்பாற்றலை மீறி, மீண்டும் ஒருவரை பாதிக்கலாம் என்பதால் அத்தொற்று அலையை எதிர்கொள்ள சிங்கப்பூர் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஓங் அறைகூவல் விடுத்துள்ளார்.
கடந்த முறை 3 விழுக்காடாக இருந்த மறுதொற்று விகிதம், சென்ற மாதம் 5.5 விழுக்காடாக உயர்ந்துவிட்டது என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது திரு ஓங் தெரிவித்தார்.
"கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படாதவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால், அடுத்த தொற்று அலையின்போது பலரும் மறுதொற்றால் பாதிக்கப்பட்டுஇருக்கலாம்," என்றார் அமைச்சர்.
அத்துடன், நாள்கள் செல்லச் செல்ல முந்திய தொற்றால் பெற்ற நோயெதிர்ப்பாற்றலும் குறைந்து விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதனால்தான் மறுதொற்று எண்ணிக்கையை சுகாதார அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது என்றும் அது அடுத்த அலை எப்போது நிகழலாம் என்பது பற்றி ஓர் அனுமானத்தைத் தரும் என்றும் அவர் சொன்னார்.
ஏற்கெனவே கொரோனா தொற்றிய ஒருவரை எட்டு மாதங்கள் கழித்து மீண்டும் அக்கிருமி தொற்றும் சாத்தியம் குறைவாகவே, அதாவது கிட்டத்தட்ட 5 விழுக்காடாக இருப்பது நல்ல அறிகுறி என்றார் அமைச்சர் ஓங்.
நிலநடுக்கோட்டிற்கு மேலே வடக்கில் உள்ள அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்றவை குளிர்காலத்தில் புதிய கொவிட்-19 திரிபால் ஏற்பட வாய்ப்புள்ள தொற்று அலையை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருவதாகவும் திரு ஓங் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சுகாதாரப் பராமரிப்புக் கொள்திறனை நிர்வகிப்பது, புதிய அலையை எதிர்கொள்வதற்கான ஆயத்தங்களில் முக்கியமானது என்றார் அவர்.
கொவிட்-19 தொற்றால் மருத்துவமனைகளுக்கு ஏற்படும் பெரும் சுமையைக் குறைக்க உதவியாக கொவிட்-19 சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
அவ்வகையில், இடைக்காலப் பராமரிப்பு நிலையங்கள் (டிசிஎஃப்) என்ற புதுவகை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இவை இரட்டைப் பயன்பாட்டு நிலையங்களாக விளங்கும். அதாவது, கொவிட்-19 தொற்றால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது கூடினால், குறைந்த அபாயமுள்ள கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை தரும் இடமாக டிசிஎஃப் செயல்படும்.
அத்துடன், தாதிமை இல்லங்களுக்காக மருத்துவமனையில் காத்திருக்கும் மற்ற நோயாளிகளுக்கான இடைக்காலப் பராமரிப்பிடமாகவும் இதனைப் பயன்படுத்த இயலும்.
செங்காங் சமூக மருத்துவ மனையில் 164 படுக்கைகளைக் கொண்ட டிசிஎஃப் ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டது.
மூன்று சூழல்களுக்கு வாய்ப்பு
நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது சிங்கப்பூர் எதிர்கொள்ள வாய்ப்புள்ள மூன்று சூழல்களை அமைச்சுகள்நிலை பணிக்குழு பட்டியலிட்டது. சிங்கப்பூர் இன்னொரு கொவிட்-19 அலையைத் தவிர்க்கக்கூடும்; அடுத்த தொற்று அலை இன்னொரு ஓமிக்ரான் அலையாக இருக்கலாம்; நோயெதிர்ப்பாற்றலை மீறித் தொற்றக்கூடிய புதுவகைத் திரிபால் இன்னொரு அலை ஏற்படலாம் என்பனவே அவை.

