போட்டித்திறன் அனுகூலங்களை இரு மடங்காக்க அமைச்சர் விவியன் வலியுறுத்து
உலகில் புவிசார் அரசியல் பிரச்சினைகள் மேலும் மேலும் நிச்சயமில்லாத ஒரு நிலையை எட்டி வருகின்றன. இந்தச் சூழலில் சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றி பெறவேண்டுமானால் சமூகப் பிணைப்பும் நம்பிக்கையும் உயிர்நாடியானவை என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு காணொளி மூலம் டாக்டர் விவியன் பேட்டியளித்தார். உலகம் இப்போது மிக ஆபத்தான கட்டத்தில் நுழைகிறது என்று அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.
"எதுவுமே நிச்சயமாகத் தெரியவில்லை. உலக வல்லரசுகள் போடும் தப்புக் கணக்குகளும் அவற்றின் செயல்பாடுகளும் மோதலுக்கு எளிதாக வழிவகுத்து விடக்கூடிய ஒரு நிலையில் இருக்கின்றன," என்று அவர் கூறினார்.
அண்மைய புவிசார் அரசியல் நிலவரங்கள் தமக்கு கவலை அளிப்பதாகக் கூறிய டாக்டர் விவியன், சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றது முதல் அனுபவித்து வந்த வளர்ச்சி, வாய்ப்பு காலகட்டம் முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிவித்தார்.
"இப்போது சிங்கப்பூர் சமூகப் பிணைப்பு, நம்பிக்கை ஆகிய தனது இரண்டு போட்டித்திறன் அனுகூலங்களைப் பலப்படுத்த முயற்சிகளை இரண்டு மடங்காக்க வேண்டிய தேவை இருக்கிறது.
"இப்படிச் செய்தால்தான் சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிகரமான நாடாகத் திகழ முடியும்," என்று டாக்டர் விவியன் தெரிவித்தார்.
உலகம் இப்போது மிக ஆபத்தான ஒரு கட்டத்தில் ஏன் இருக்கிறது என்பதற்கான பல காரணங்களை பேட்டியில் விவரித்தார்.
"உக்ரேன் மீது ரஷ்யா படை எடுத்துள்ளது. அதிக பணவீக்கம், அதிக வட்டி விகிதம் ஆகியவற்றுடன் கூடிய ஒரு நிலையை உலகப் பொருளியல் இப்போது எதிர்நோக்குகிறது.
"ஆற்றலை அடிப்படையாகக் கொண்ட அனைத்துலக பொருள் சேவை விநியோகக் கட்டமைப்புகள் பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருப்பதையும் அவர் சுட்டினார்.
"உலகம் இப்போது கொவிட்-19 பிடியில் இருந்து மீண்டு தலைதூக்குகிறது. இந்த நிலையில், அதிக மரண விகிதத்துடன் கூடிய மற்றொரு வைரஸ் கிருமி தலையெடுக்கக்கூடிய ஆபத்து ஒரு மிரட்டலாக ஆகி இருக்கிறது.
"அதேவேளையில், நிர்வாக முறைகளில் நம்பிக்கையும் பிணைப்பும் குறைவதன் விளைவாக பல நாடுகளின் சமூகங்களில் பிளவு அதிகமாகிறது.
"போர், பணவீக்கம், பஞ்சம், கிருமித்தொற்று, நம்பிக்கையின்மை, பிணைப்பின்மை ஆகிய எல்லா அம்சங்களும் துரதிர்ஷ்ட வசமான ஒரு புதிய புவிசார் அரசியல் காலகட்டத்திற்கு நம்மை இட்டுச் செல்கின்றன," என்று டாக்டர் விவியன் கூறினார்.
பகுத்துணர்ந்து முடிவுகளை எடுத்து அவற்றை நிறைவேற்றுவதற்கான ஆற்றல் சிங்கப்பூரிடம் இருக்கிறது. இதுவே அதன் மிகப் பெரிய போட்டித்திறன் அனுகூலம் என்று அவர் குறிப்பிட்டார்.
நிச்சயமில்லாத புவிசார் அரசியல் சூழலைக் கடந்து செல்ல முயலும்போது சிங்கப்பூரர்கள் இந்த அனுகூலத்தை தொடர்ந்து கட்டிக்காத்து வரவேண்டும் என்று டாக்டர் விவியன் வலியுறுத்தினார்.
தேசிய தினப் பேரணியில் பிரத மர் ஆற்றிய உரையில் இருந்து ஒரு குறிப்பை மேற்கோள்காட்டி பேசிய டாக்டர் விவியன், "கடந்த 60 ஆண்டு காலமாக சிங்கப்பூர் வளர்ச்சியையும் வாய்ப்புகளையும் அனுபவித்து வந்திருக்கிறது.
"ஆனால், அந்தக் காலகட்டம் இப்போது முடியும் தருவாயை எட்டி இருக்கிறது.
"இந்தச் சூழலுக்கு ஆயத்த மாகி இங்குள்ள மக்கள் இப் போதைய உண்மைச் சூழலை உணர்ந்துகொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார்.

