அந்திய சக்திகள் உள்நோக்கத்துடன் சிங்கப்பூர் மீது ஆதிக்கம் செலுத்த முயல்கின்றன. அத்தகைய முயற்சிகளுக்குப் பலியாகிவிடாமல் சிங்கப்பூரர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்திக் கூறினார்.
மற்றவர்களால் தவறான வழி காட்டப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில், நம்பத்தகுந்த தகவல்களை மட்டும் மக்கள் நாடவேண்டும் என்று சிங்கப்பூரர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு அளித்த காணொளிப் பேட்டியில் டாக்டர் விவியன் இவற்றைத் தெரிவித்தார்.
"இப்போது 'சுனாமி' போல் சமூக ஊடகங்கள் எங்கும் நிறைந்துள்ளன. தனிப்பட்ட குறுஞ்செய்திகளும் வருகின்றன. பலதரப்பட்ட தகவல்கள் சிங்கப்பூரர்களைச் சென்றடைகின்றன. அத்தகைய செய்திகளில் கணிசமானவை சிங்கப்பூருக்கு வெளியே உருவாகி இங்கு வருபவை.
"அந்தச் செய்திகளைப் பரப்புவோரின் எண்ணம், சிங்கப்பூரின் நீண்டகால நலன்களைக் கருத்தில் கொள்ளாத ஒன்றாக இருக்கலாம். அதேவேளையில், அத்தகைய செய்திகளைப் பரப்புவோர் உள்நோக்கத்துடன் செயல்படும் வாய்ப்பும் இருக்கிறது.
"ஆகையால், தங்களுக்கு வரும் செய்திகள் நம்பத்தகுந்தவைதானா என்பதை சிங்கப்பூரர்கள் முதலில் சரிபார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. சிங்கப்பூரர்கள் மிகவும் விழிப்பாக இருந்து அத்தகைய அந்நிய சக்தி களின் பிடியில் சிக்காமல் பாதுகாப்பாக இருந்துகொள்ள வேண்டும்," என்றார் டாக்டர் விவியன்.

