அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரில் கார் பேட்டை ஒன்றில் புதன்கிழமை இரவு இந்திய அமெரிக்க மாதர்கள் நால்வரை மெக்சிகோ அமெரிக்க மாது ஒருவர் தாக்கியதாகத் தெரியவந்ததை அடுத்து அந்த மெக்சிகோ அமெரிக்க மாதை காவல்துறை கைது செய்து இருக்கிறது.
எஸ்மரல்டா யுப்தோன் என்ற அந்த மாது, தாக்கி காயம் விளைவித்தது, பயமுறுத்தும் அளவுக்கு மிரட்டல்களை விடுத்தது ஆகிய குற்றச்சாட்டின் பேரில் கைதாகி இருக்கிறார் என்றும் அவருக்கு $10,000 பிணை அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இந்தச் சம்பவத்தைக் காட்டும் ஒரு காணொளி இணையத்தில் பரபரப்பைக் கிளப்பிவிட்டுள்ளது.
அமெரிக்க இந்தியர்களைக் குறிவைத்து இனவாத கருத்துகளைத் தெரிவிப்பதா என்று சமூக ஊடகத்தில் பலரும் காட்டமாகக் குறைகூறி வருகிறார்கள்.
"நாங்கள் சும்மா இருக்கையில் எங்களிடம் வந்து ஏன் பேச்சு கொடுக்கிறீர்கள்?" என்று அந்த மெக்சிகோ அமெரிக்க மாதைப் பார்த்து இந்திய அமெரிக்க மாதர்கள் கேட்டபோது, "உங்களை எனக்கு பிடிக்கவில்லை. அதுதான் காரணம்.
"இந்தியாவில் சிறந்த வாழ்க்கை இல்லாததால்தான் இங்கே நீங்கள் வருகிறீர்கள். நீங்கள் பேசும் முறை எனக்குப் பிடிக்கவில்லை.
"அமெரிக்காவுக்கு வந்து எல்லாவற்றையும் இலவசமாகப் பெற விரும்புகிறீர்கள். நான் அமெரிக்காவில் பிறந்தேன். நீங்கள் அமெரிக்காவிலா பிறந்தீர்கள்?
"இந்தியாவில் வாழ்க்கை பிர மாதம் என்றால் நீங்கள் எல்லாம் ஏன் இங்கே வந்தீர்கள்? திரும்பி போக வேண்டியதுதானே?" என்று அந்த மெக்சிகோ அமெரிக்க மாது திட்டியதை அந்த 5.30 நிமிட காணொளி காட்டியது.
அப்போது "நாங்கள் உங்களை ஒன்றுமே சொல்லவில்லை. நீங்கள்தான் எங்களிடம் வந்து வம்பு செய்கிறீர்கள்," என்று இந்திய அமெரிக்க மாதர்கள் தெரிவித்தனர்.
அந்தச் சம்பவத்தைத் தன் கைப் பேசியில் படமெடுக்க அந்த நால்வரில் ஒரு மாது முயன்றார்.
அப்போது படம் எடுப்பதை நிறுத்தும்படி எச்சரித்த அந்த மெக்சிகோ அமெரிக்க மாது, இல்லை என்றால் துப்பாக்கியை எடுத்து சுட்டுவிடுவேன் என்று மிரட்டி கைப்பேசியைப் பிடுங்க முயன்று இந்திய மாதர்களைத் தாக்கினார். அந்த நான்கு மாதர்களில் ஒருவரான ராணி பானர்ஜி என்பவர் காணொளியை ஃபேஸ்புக்கில் பதிவேற்றினார்.
இதனிடையே, இந்தச் சம்பவம் பற்றி கருத்துரைத்த காவல்துறை, இன வெறுப்புக் குற்றமாகக் கருதி விசாரணை நடப்பதாகக் கூறியது.

