இரண்டு நாள்களில் இரு வேலையிட மரணங்கள்

இரண்டு நாள்களில் இரு வேலையிட மரணங்கள்

2 mins read
035dfc3e-a36c-49e6-8a0e-607009ac0aef
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இரண்டு நாள்களில் வெவ்வேறு இடங்களில் இரு வேலையிட மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

வியாழக்கிழமையன்று (25 ஆகஸ்ட்) கிராஞ்சி சாலையில் உள்ள பொதுப் பயனீட்டுக் கழகத்தின் வேலைப் பணித் தளத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த 65 வயது ஊழியர் ஒருவர் மாண்டார்.

அதற்குப் பிறகு வெள்ளிக்கிழமையன்று (26 ஆகஸ்ட்) உட்லண்ட்ஸ் தொழில்துறைப் பூங்கா 'டி'யில் நிகழ்ந்த மற்றொரு சம்பவத்தில் பங்ளாதேஷைச் சேர்ந்த 32 வயது ஊழியர் உயிரிழந்தார்.

இச்சம்பவங்களைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இவ்வாண்டு வேலையிடங்களில் நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை 36க்குக் கூடியது.

சென்ற ஆண்டு முழுவதும் 37 வேலையிட மரணங்கள் நிகழ்ந்தன.

வேலையிடப் பாதுகாப்பை மேம்படுத்த மேலும் சில நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தப்போவதாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

"தங்களின் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு நிறுவனங்கள் கூடுதல் பொறுப்பேற்கவேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்," என்று மனிதவள அமைச்சு சனிக்கிழமையன்று (27 ஆகஸ்ட்) சொன்னது.

"ஊழியர்களும் பாதுகாப்பிற்கு ஆக அதிக முக்கியத்துவம் வழங்கவேண்டும். பாதுகாப்பற்ற வேலையிட நடைமுறைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தங்கள் மேற்பார்வையாளர்களுக்கும் மனிதவள அமைச்சுக்கும் தெரியப்படுத்தவேண்டும்," என்று அமைச்சு குறிப்பிட்டது.

வியாழக்கிழமையன்று கிராஞ்சி நீர்மீட்புப் பணித் தளத்தில் நிகழ்ந்த சம்பவத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த 65 வயது ஊழியர் மீது 'ஃபோர்க்லிஃப்ட்' எனும் பளுதூக்கும் வாகனம் ஏறியது.

பளுதூக்கும் வாகனத்தை லாரியுடன் இணைக்கும் முயற்சியில் ஊழியர் ஈடுபட்டபோது அந்த அசம்பாவிதம் நேர்ந்தது.

கூ டெக் புவாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மறுநாள் உயிரிழந்தார்.

மாண்ட ஊழியர் பொதுப் பயனீட்டுக் கழகத்துடன் இணைந்து செயல்படும் நிறுவனமான சன்லீயில் வேலை செய்தவர்.

வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்த சம்பவத்தில் கட்டுமானத் தளத்தில் கனமான பொருள்களை இடம் மாற்றும்போது அவை விழுந்து பங்ளாதேஷைச் சேர்ந்த 32 வயது ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டார்.

அவரின் மரணத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ உதவியாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

ஊழியர் மாண்டதாக அந்த கட்டுமானத் திட்டத்தை மேற்கொள்ளும் குளோபல் ஃபெளண்ட்ரீஸ் நிறுவனம் சனிக்கிழமையன்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.