சிங்கப்பூரில் கடந்த இரண்டு நாள்களில் இரண்டு வேலையிட மரணங்கள் நிகழ்ந்து இருக்கின்றன.
முதல் விபத்து கிராஞ்சி ரோட்டில் உள்ள பொதுப் பயனீட்டுக் கழக வேலையிடத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்தது. அதில் 65 வயது சிங்கப்பூரர் மாண்டார்.
உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டை டி-யில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் 37 வயது பங்ளாதேஷ் ஊழியர் பலியானார்.
இந்த இரண்டு மரணங்களையும் சேர்த்து இந்த ஆண்டில் இதுவரை வேலையிட விபத்துகளில் மாண்டவர்களின் எண்ணிக்கை 36 ஆகி இருக்கிறது.
சென்ற ஆண்டு முழுவதற்கும் வேலை யிட மரணங்களில் மொத்தம் 37 பேர்தான் மாண்டனர். வேலையிடப் பாதுகாப்பைப் பலப்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தப்போவதாக மனிதவள அமைச்சு அறிவித்தது.
இந்த ஆண்டு வேலையிட மரண எண்ணிக்கை அதிகரித்து இருப்பது குறித்து தான் மிகவும் கவலைப்படுவதாகக் கூறிய அமைச்சு, ஆகஸ்ட்டில் மட்டும் ஐந்து உயிர்பலி விபத்துகள் நிகழ்ந்து இருப்பதைச் சுட்டியது.
முதலாளிகள் தங்களுடைய எல்லா ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சு நேற்று அறிக்கையில் தெரிவித்தது.
ஊழியர்களும் வேலையிடப் பாதுகாப்பை மிக முக்கியமானதாகக் கருதவேண்டும். வேலையிடங்களில் ஆபத்துள்ள சூழலை ஊழியர்கள் அணுக்கமாகக் கண்காணித்து அதுபற்றி மேற்பார்வையாளர்களுக்கும் மனிதவள அமைச்சுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று அமைச்சு கூறியது.
மரண விபத்துகளுக்கான காரணம் குறித்து அமைச்சு புலன்விசாரணை நடத்தி வருகிறது. குற்றம் செய்து இருப்பதாகத் தெரியவந்தால், முதலாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க அமைச்சு தயங்காது என்றும் அது அறிவித்து இருக்கிறது.

