பெருவெள்ளம்: உலக நாடுகளிடம் உதவிகோரும் பாகிஸ்தான்
கனமழையாலும் பெருவெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் உலக நாடுகளிடம் உதவி கோரியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பருவமழையால் 119 பேர் மாண்டுவிட்டனர் என்றும் மொத்த உயிரிழப்பு 1,033ஆக உயர்ந்துவிட்டது என்றும் பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்தது.
அமெரிக்கா, பிரிட்டன், துருக்கி, கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. ஆனால் இன்னும் நிதி தேவைப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
"பாகிஸ்தான் பெரும் பொருளியல் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. அவற்றிலிருந்து மீளத் தொடங்கிய நிலையில் இத்தகைய பேரிடர் நிகழ்ந்துள்ளது," என்றார் பாகிஸ்தான் உள்துறை அமைச்சு அதிகாரியான சல்மான் சுஃபி.
இதனால், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகத் திருப்பிவிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் வடகிழக்கில் பல ஆறுகளும் கரையை உடைத்துக்கொண்டு ஓடி, திடீர் வெள்ளத்தை ஏற்படுத்துவதால் பல்லாயிரக்கணக்கானோர் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். தென்கிழக்கிலுள்ள சிந்து மாநிலமே ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 33 மில்லியன் பேர், அதாவது பாகிஸ்தான் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 15 விழுக்காட்டினர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் தெரிவித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட அவர், தாங்கள் மதிப்பிட்டதைவிட அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சொன்னார்.
பருவநிலை மாற்றமே இந்தப் பேரிடருக்கும் அதனால் ஏற்பட்டுள்ள பேரழிவிற்கும் காரணம் என்று அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர்.

