சிங்கப்பூரை உருமாற்றுவதற்கான திட்டங்கள் புதிய நகரங்களை மட்டுமல்லாது முதிர்ச்சி அடைந்த பேட்டைகளையும் உள்ளடக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
தமது டெக் கீ தொகுதியில் நேற்று இடம்பெற்ற தேசிய தினக் கொண்டாட்ட இரவு விருந்தில் பங்கேற்றுப் பேசியபோது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
உருமாற்றத் திட்டங்களைப் பொறுத்தமட்டில், முதிர்ச்சியடைந்த பேட்டைகள் விட்டுவிடப்படாது என்பதற்கு டெக் கீ வட்டாரம் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று திரு லீ குறிப்பிட்டார்.
இம்மாதம் 22ஆம் தேதி தேசிய தினப் பேரணி உரையை ஆற்றியபோது, ஜூரோங் லேக் வட்டாரம், தி கிரேட்டர் சௌதர்ன் வாட்டர்ஃபிரன்ட், பாய லேபார் போன்ற புதிய நகர மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து அவர் பேசியிருந்தார்.
இந்நிலையில், "ஒவ்வொரு புதிய நகரமும் முந்திய நகரத்தைவிட மேலும் வாழத் தகுந்ததாகவும் பசுமையானதாகவும் நீடித்து நிலைத்தன்மை மிக்கதாகவும் இருக்கும்," என்று அப்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
2030களில் இருந்து பாய லேபார் ஆகாயப்படைத்தளத்தின் இடமாற்றம் செய்யப்படும்போது, அந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 150,000 புதிய தனியார் வீடுகளையும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளையும் கட்ட முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இது, தோராயமாக பொங்கோல் மற்றும் செங்காங் வட்டாரத்தின் அளவிற்கு ஈடானது.
அத்துடன், இடத்தை அதிகப்படுத்தி, மேலும் பல வசதிகளை ஏற்படுத்தும் வகையில், அந்த ஆகாயப்படத்தைச் சுற்றியுள்ள ஹவ்காங், மரின் பரேட், பொங்கோல் போன்ற பகுதிகளில் சில கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படலாம்.
நேற்றைய டெக் கீ தேசிய தினக் கொண்டாட்ட இரவு விருந்து நிகழ்ச்சியின்போது, அவ்வட்டாரத்தை மேலும் மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களையும் பிரதமர் பகிர்ந்துகொண்டார்.
அங் மோ கியோ அவென்யூ 1ல் குறிப்பிட்ட சில புளோக்குகளில் இடம்பெறும் மேம்பாட்டுப் பணிகள் 2023 மூன்றாம் காலாண்டிற்குள் நிறைவுபெறும். அவ்வட்டாரத்தில் புதிய பிசிஎஃப் ஸ்பார்க்கல்டாட்ஸ் மையத்தைக் கடந்த மாதம் தாம் திறந்துவைத்ததையும் திரு லீ சுட்டினார்.
"இதன்மூலம் இளம் குடும்பங்கள் எளிதில் அணுகி, கட்டுப்படியான கட்டணத்தில் குழந்தைப் பராமரிப்பு சேவையைப் பெற முடியும்," என்றார் அவர்.
குடியிருப்பாளர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் அங் மோ கியோ நகர மையத்தை மறுவடிவமைப்பு செய்து, மேம்படுத்துவதற்குத் திட்டங்கள் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அங் மோ கியோ ஹப்பிற்கு வெளியிலுள்ள பகுதியையும் உள்ளடக்கிய அந்த மேம்பாட்டுப் பணிகளின் முதற்கட்டமானது அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டிற்குள் நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் திரு லீ கூறினார்.

