தேவையற்ற நெருக்குதல் கூடாது எனச் சாடல்
இலங்கைக்கு இப்போது தேவைப்படுவது உதவிதானே தவிர, தேவையற்ற நெருக்குதல்கள் அல்ல என்று கூறி, சீனத் தூதரின் கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
"இலங்கைக்கான சீனத் தூதரின் கருத்துகளை அறிந்தோம். அவரது இந்த அடிப்படை அரசதந்திர நெறிமுறை மீறலானது, அவரது தனிப்பட்ட பண்பாக இருக்கலாம் அல்லது சீனாவின் தேசிய அணுகுமுறையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்," என்று இலங்கைக்கான இந்தியத் தூதரகம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியா மீதான சீனத் தூதர் ஸி ஸென்ஹோங்கின் பார்வை, அவரது சொந்த நாடு நடந்துகொள்ளும் விதத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் என்று இந்தியத் தூதரகம் கூறியிருக்கிறது.
"ஆனால், இந்தியா அவ்வாறு நடந்துகொள்ளாது என்று உறுதி அளிக்கிறோம்," என்று அந்த டுவிட்டர் பதிவில் கூறப்பட்டு உள்ளது.
அறிவியல் ஆய்வுக் கப்பலின் வருகைக்கு சீனத் தூதர் புவிசார் அரசியல் சூழலைக் காரணமாகக் கூறுவது போலி நடிப்பு என்றும் அது சாடியது.
ஒளிவுமறைவும் கடன் அடிப்படையிலான செயல்திட்டங்களும் குறிப்பாக சிறிய நாடுகளுக்கு இப்போது ஒரு பெரும் சவாலாக உள்ளன என்றும் அண்மைய செயல்பாடுகளை எச்சரிக்கையாகக்கொள்ள வேண்டும் என்றும் இந்தியத் தூதரகம் தெரிவித்தது.
"இலங்கைக்கு இப்போது தேவை உதவிதான், தேவையில்லாத நெருக்குதல்கள் அல்ல," என்றும் அது வலியுறுத்தியது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக என்று கூறிக்கொண்டு, ஆனால் அதற்கு எந்தச் சான்றுகளும் இலங்கையின் சுதந்திரத்திலும் இறையாண்மையிலும் வெளிநாட்டுத் தலையீடு இருப்பதாகக் கடந்த வெள்ளிக்கிழமை சீனா, இந்தியாவை மறைமுகமாகச் சாடியிருந்தது.
இலங்கைத் துறைமுகமான அம்பாந்தோட்டைக்குச் சீன ஆய்வுக் கப்பல் வருவதை எதிர்த்து இலங்கைக்கு இந்தியா நெருக்கடி கொடுத்தது என்ற சீனாவின் மறைமுகமான சாடலை இந்தியா நிராகரித்தது.
அதே நேரத்தில், தனது பாதுகாப்பு குறித்த அக்கறைகளின் அடிப்படையிலேயே தான் முடிவு எடுப்பதாகவும் இந்தியா உறுதிபடத் தெரிவித்தது.
"இந்தியா மீதான சீனாவின் மறைமுகமான சாடலை நிராகரிக்கிறோம். இலங்கை, இறையாண்மை கொண்ட ஒரு நாடு. அதன் சொந்த முடிவுகளை அதுவே எடுக்கிறது," என்று அண்மையில் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும்போது இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்சி கூறி இருந்தார்.
இம்மாதம் 16ஆம் தேதி இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைச் சென்றடைந்த அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட சீனாவின் 'யுவான் வாங் 5' கப்பல், பின்னர் 22ஆம் தேதி அங்கிருந்து கிளம்பியது.
இந்நிலையில், இலங்கைக்குச் செல்லும் வழியில் சீனக் கப்பலில் உள்ள கண்காணிப்பு அமைப்புகள் இந்தியாவின் தற்காப்பு அம்சங்களைக் குறிவைக்க முயலலாம் என்று இந்தியா கவலை தெரிவித்திருந்தது.

