குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகளும் சண்டைகளும் ஏற்படுவது இயல்புதான்.
ஆனால், மனைவிக்குப் பயந்து ஏறக்குறைய ஒரு மாதமாக பனைமரத்தின் மேலே ஆடவர் ஒருவர் வசித்துவருவது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மவு மாவட்டம், கோப்பகஞ்ச் பகுதியைச் சேர்ந்த ராம் பிரவேஷ், 42, என்ற அந்த ஆடவர், அம்மரத்தைக் கிட்டத்தட்ட ஒரு வீடுபோலவே ஆக்கிக்கொண்டதாகச் சொல்லி வருத்தப்பட்டார் அவரின் தந்தை விஷுன்ராம்.
தம் மகன் ராம் பிரவேஷுக்கும் அவருடைய மனைவிக்கும் அன்றாடம் சண்டை நடக்கும் என்றும் மனைவியிடம் அவர் அடிவாங்காத நாளில்லை என்றும் திரு விஷுன்ராம் கூறினார்.
குடும்பத்தினர் உணவு, தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தால் ராம் பிரவேஷ் அதைக் கயிற்றில் கட்டி மேலே இழுத்துக்கொள்வாராம். அன்றாடக் கடன்களைக் கழிக்க இரவு நேரத்தில் கீழே இறங்கிவரும் அவர், அதை முடித்தபின் மீண்டும் மரத்தின்மீது ஏறிக்கொள்வதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட 80 அடி உயரமுள்ள அம்மரம் ஊரின் நடுவே அமைந்திருப்பதால் அதன் மேலிருந்து பார்த்தால் எல்லா வீடுகளின் முற்றங்களும் நன்றாகத் தெரியுமாம். அதனால், ராம் பிரவேஷ் மரத்தின் மேலிருப்பது தங்களது அந்தரங்கத்திற்கு இடையூறாக உள்ளது என்று அவ்வூர்ப் பெண்கள் புலம்புகின்றனர்.
இதனால், ராம் பிரவேஷை எப்படியாவது கீழிறக்க தாங்கள் முயன்றால் தங்கள்மீது அவர் செங்கற்களை வீசி எறிவதாக உள்ளூர்வாசிகள் கூறினர்.
இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் நிலைமையைக் காணொளியாகப் பதிவுசெய்ததுடன் கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.
மரத்தின்மீது வசிக்கும் தன் மகனைக் காண அக்கம்பக்க ஊர்களில் இருந்து நாள்தோறும் பலர் வந்துசெல்வதாக திரு விஷுன்ராம் சொன்னார்.

