மாதங்கி இளங்கோவன்
ஈராண்டுகளுக்கு மேலாக நடப்பிலிருந்த உட்புறங்களில் முகக்கவசம் அணியும் கட்டுப்பாடு நேற்று அகற்றப்பட்டது. எனினும் கொரோனா தொற்று இன்னமும் நீடிக்கும் நிலையில் மக்கள் பலரும் தங்கள் பாதுகாப்புக்காக முகக்கவசத்தைக் கைவிடுவதாக இல்லை. பழக்கமாகிவிட்டதால் சிலரால் முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்ல முடிவதில்லை. லிட்டில் இந்தியா பகுதியிலும் நேற்று பெரும்பாலானோர் முகக் கவசம் அணிந்தே வலம் வந்தனர்.
"கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் உடல்நலத்தைக் காப்பதற்கு எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிவேன்," என்றார் ஷாமலா தேவி, 65. எனினும் ஆசிரியர்கள் முகக்கவசம் அணியத்தேவையில்லை என்பது இவரின் கருத்து. பள்ளிகளில் ஆசிரியர்கள் முகக்கவசம் அணியாமல் பாடம் கற்பிக்கும்போது அவர்கள் கூறும் விஷயங்களை மாணவர்கள் சுலபமாக புரிந்துகொள்வார்கள் என்றார் இல்லத்தரசியான ஷாமலா.
வெளியிடங்களில் முகக்கவசம் இல்லா மல் சிரமமின்றி மூச்சுவிட முடிவதாகக் கூறும் செவாகொ பேஷன் கடையில் பணிபுரியும் ராம்ஷீலா, 54, பேருந்திலும் பெருவிரைவு ரயில்களிலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு முகக்கவசம் அணிவது தவிர்க்க முடியாதது என்றார்.
எண்ணெய், எரிவாயுத் துறையில் தரக்கட்டுப்பாடு அதிகாரியாக இருக்கும் சுப்புராயல் சிவசக்தி, 48, தமது துறை சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப் பதால் வேலையிடத்தில் முகக்கவசம் அணிவதாகக் கூறினார்.
எஸ்.பி விலாஸில் பணியாற்றும் ஆறுமுகம் சின்னையா, "சமைக்கும் தொழிலில் இருப்பதால் முகக்கவசம் அணிவது நல்லது. உணவின் தூய்மை, தரம் குறித்து வாடிக்கையாளர்களுக்கும் நம்பிக்கை ஏற்படும்," என்றார்.
பொதுப் போக்குவரத்துச் சேவைகள், மருத்துவச் சேவை வழங்கும் இடங்கள், இயற்கையாக காற்றோட்டமில்லாத பேருந்து நிறுத்துமிடம் போன்ற இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
டாக்சிகளிலும் தனியார் வாடகை கார்களிலும் முகக்கவசம் தேவையில்லை. எனினும், முகக்கவசத்தைக் கழற்றப் போவதில்லை என்றார் 56 வயது டாக்சி ஓட்டுநர் பிரபாகரன் ரமேஷ். "முகக்கவசம் அணியாததால் முன்னர் பலர் பயணங்களை ரத்து செய்துள்ளனர். இப்போது பழக்கமாகிவிட்டது. மேலும், என் வீட்டில் பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் பாதுகாப்பாக இருப்பது முக்கியம்," என்றார் அவர்.
மேலும் செய்திகள் பக்கம் 2ல்

