அனைத்துத் துறைகளிலும் சிறந்த திறனாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில் வெளிநாட்டு கட்டமைப்பு, நிபுணர்களுக்கான புதிய வேலை அனுமதி அட்டை (ஓவர்சீஸ் நெட்வொர்க்ஸ் அண்ட் என்டர்பிரைஸ் (ஒன்) பாஸ்) வரும் ஜனவரி 1 முதல் அறிமுகமாகிறது. இதற்கு தகுதி பெற மாதச் சம்பளம் $30,000 வெள்ளியும் அதற்கு மேலும் இருக்க வேண்டும்.
உலகளாவிய திறனாளர் மையமாக சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்துவதற்கான பல முயற்சிகளில் இதுவும் ஒன்று என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று தெரிவித்தார்.
நியாயமான பரிசீலனை முறை திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்பட்ட வேலை விளம்பர விதிமுறைகள், நடப்பில் உள்ள இபி திட்டத்தின் மாற்றங்கள் ஆகியவை திட்டமிடப்பட்டுள்ள மற்ற மாற்றங்களில் அடங்கும்.
"திறன் பற்றாக்குறை உள்ள துறைகளில் உயர்மட்ட திறனாளர்களையும் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப நிபுணர்களையும் ஈர்ப்பதற்காக, வேலை அனுமதி அட்டை கட்டமைப்பில் குறிப்பிட்ட மேம்பாடுகள் செய்யப்படுகின்றன," என்று அவர் விளக்கினார்.
நான்கு பகுதிகளை உள்ளடக்கும் புதிய திட்டங்களை செயல்படுத்த வர்த்தக தொழில் அமைச்சு, தொடர்பு, தகவல் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து மனிதவள அமைச்சு பணியாற்றும்.
முதலாவதாக, எந்த நேரத்திலும் சிங்கப்பூரில் பல நிறுவனங்களைத் தொடங்குவதற்கும் இயக்குவதற்கும் வேலை செய்வதற்கும் ஒன் பாஸ் அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்கு நீக்குப்போக்கை வழங்கும்.
செய்யும் குறிப்பிட்ட வேலையுடன் பிணைக்கப்பட்டுள்ள இபி போல் இது இருக்காது.
ஒன் பாஸ் ஐந்து ஆண்டுக்காலம் வேலை செய்வதற்கு அனுமதி அளிக்கிறது.
ஒன் பாஸ் அனுமதி அட்டை வைத்திருப்பவரைச் சார்ந்திருப்போரும் வாழ்க்கைத் துணையும் ஒப்புதல் கடிதம் பெறுவதன் மூலம் வேலை செய்ய அனுமதிக்கப்படுவர்.
ஒன் பாஸ் விண்ணப்பதாரர்கள் 30,000 வெள்ளியும் அதற்கு மேலும் வருமானம் ஈட்ட வேண்டும். சிங்கப்பூரில் அண்மைக்காலத்தில் வேலைபார்த்திராத வெளிநாட்டினர், குறைந்தது 500 மில்லியன் அமெரிக்க டாலர் சந்தை உச்ச வரம்பு அல்லது ஆண்டு வருவாய் யுஎஸ் 200 மில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட நிறுவனத்தில் வேலை செய்திருக்கவேண்டும் அல்லது செய்ய வேண்டும்.
கலை, கலாசாரம், விளையாட்டு, அறிவியல், தொழில்நுட்பம், ஆய்வு, கல்வி ஆகியவற்றில் 'உன்னத சாதனை' படைத்த தனிமனிதர்களும் சம்பள வரம்பை பூர்த்தி செய்யாவிட்டாலும் இந்த ஒன் பாஸுக்கு தகுதி பெறலாம் என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.
இந்த அட்டை சிங்கப்பூருக்கு அர்த்தமுள்ள முறையில் பங்களிக்கவே நீக்குப்போக்குகளை வழங்குகிறது. சிங்கப்பூருக்குப் பயணம் செய்ய தவறாகப் பயன்படுத்துவதற்கு அல்ல.
அடுத்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் தற்போதுள்ள எம்ப்ளாய்மெண்ட் பாஸ் திட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்படும்.
புதிய அளவுகோல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது முதல் 10 விழுக்காட்டினருக்குப் பொருந்தும். இதன்படி, இவர்கள் நியாயமான பரிசீலனை முறை வேலை விளம்பர விதிமுறைகள் அல்லது நடைமுறைக்கு வரவுள்ள இணை மதிப்பீட்டுக் கட்டமைப்பின் கீழ் வரமாட்டார்கள்.
இணை மதிப்பீட்டுக் கட்டமைப்பு என்பது தனிப்பட்ட மற்றும் நிறுவனத்துடன் தொடர்பு டைய முழுமையான பண்புகளின் அடிப்படையில் இபி விண்ணப்பதாரர்களை மதிப்பீடு செய்யும் புள்ளிகள் அடிப்படையிலான கட்டமைப்பாகும். அடுத்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு இது பொருந்தும்.
சம்பள வரம்பு $20,000லிருந்து $22,500 ஆக உயர்கிறது. அதே நேரத்தில் தனிப்பயன் இபி-க்கான சம்பள வரம்பும் $22,500 ஆகிறது.
தனிப்பயன் இபி என்பது அதிக வருமானம் ஈட்டும் இபி அட்டைதாரர்கள், வெளிநாட்டு நிபுணர்களுக்கானது. இது எம்ப்ளாய்மெண்ட் பாஸைவிட அதிக நீக்குப்போக்கானது.
2020 அக்டோபரில் வேலை தேடும் கால அளவு 28 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இபி விண்ணப்பங்களின் பரிசீலனைக் காலமும் விரைவுபடுத்தப்படும். தற்போது கிட்டத்தட்ட மூன்று வார காலமாக உள்ள பரிசீலனைக் காலம் 10 வேலை நாட்களாகக் குறைக்கப்படும். கூடுதல் காலம் தேவைப்பட்டால் அமைச்சு முதலாளிகளுக்கு தெரிவிக்கும்.
குறிப்பிட்ட தொழில்நுட்ப வேலைகளில் பணிபுரிய அனுபவமிக்க நிபுணர்களுக்கு ஐந்தாண்டு கால இபி தேர்வை அமைச்சு வழங்கும். அனுபவத்திற்கு ஏற்ப, இவர்கள் குறைந்தது $10,500 சம்பள வரம்பை பூர்த்தி செய்ய வேண்டும்.
"அனுபவமிக்க தொழில்நுட்ப நிபுணர்கள் சிங்கப்பூருக்கு இடம்பெயர்வது குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும்போது இந்த மேம்பாடு அவர்களுக்கு அதிக நிச்சயத் தன்மையை வழங்கும். உள்ளூர் திறன்களை வளர்க்கும் அதேநேரத்தில் தொழில்நுட்பத் திறன்களை வலுவாக்கவும் இது வழிவகுக்கிறது," என்று குறிப்பிட்டார் அமைச்சர் டான்.

