வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் (பிடிஓ) 4,993 வீடுகளை நேற்று விற்பனைக்கு விட்டது. முதன்மை வட்டார பொது வீடமைப்புத் திட்டத்தின்கீழ் புக்கிட் மேராவில் அமையும் இரு திட்டங்களும் இதில் அடங்கும்.
இவ்வாண்டின் மூன்றாவது வீட்டு விற்பனை நடவடிக்கை இதில், ஆறு பேட்டைகளில் இடம்பெறும் ஏழு வீடமைப்புத் திட்டங்களின்கீழ் வீடுகள் கட்டப்படவுள்ளன.
புக்கிட் மேராவில் இடம்பெறும் இரு திட்டங்களின்கீழ் வீடு வாங்கவும் விற்கவும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும்.
இவ்விரு திட்டங்களில் சிறியது அலெக்சாண்ட்ரா வேல். ரெட்ல்ஹில் எம்ஆர்டி நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ள இடத்தில் இரு புளோக்குகள் அமையவிருக்கின்றன.
அவற்றில் 782 மூவறை, நான்கறை வீடுகள் கட்டப்படும். அவ்விரு புளோக்குகளில் ஒன்றில் சில வாடகை வீடுகள் அமையவுள்ளன.
இத்திட்டத்திற்கான மூவறை வீட்டு விலைகள் மானியத்திற்கு முன்பாக $385,000க்கும் $477,000க்கும் இடைப்பட்டிருக்கும். நாலறை வீட்டு விலைகள் $547,000க்கும் $705,000க்கும் இடைப்பட்டிருக்கும்.
இந்த வீட்டுத் திட்டம் 2028 இரண்டாம் காலாண்டில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுவதால் வீடு வாங்குவோர் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
புக்கிட் மேராவில் இடம்பெறும் மற்றொரு வீட்டுத் திட்டம் ஹேவ்லக் ஹில்சைட். ஹேவ்லக் சாலையில் அமையவிருக்கும் இரு புளோக்குகளில் 869 மூவறை, நாலறை வீடுகள் கட்டப்படும்.
இத்திட்டத்திற்கான மூவறை வீட்டு விலைகள் $370,000க்கும் $515,000க்கும் இடைப்பட்டிருக்கும். நான்கறை வீட்டு விலைகள் $531,000க்கும் $730,000க்கும் இடைப்பட்டிருக்கும்.
இந்த வீட்டுத் திட்டம் 2028 கடைசிக் காலாண்டில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் வீடு வாங்குவோர் ஐந்தரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
சென்ட்ரல் வீவ் @ அங் மோ கியோ வீட்டுத் திட்டத்தில் 896 ஈரறை ஃபிளெக்சி, நான்கறை, ஐந்தறை, மூன்று தலைமுறை வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
நான்கறை வீட்டு விலைகள் $535,000 முதல் $676,000 வரை இருக்கும். ஐந்தறை வீட்டு விலைகள் $720,000க்கும் $877,000க்கும் இடைப்பட்டிருக்கும்.
இந்த வீட்டுத் திட்டம் 2028 இரண்டாம் காலாண்டில் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் வீடு வாங்குவோர் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
தெம்பனிஸ் வட்டாரத்தில் சன் பிளாசா ஸ்பிரிங் எனும் வீட்டுத் திட்டத்தின்கீழ் 267 நாலறை, ஐந்தறை வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
நான்கறை வீட்டு விலைகள் $381,000லிருந்தும் ஐந்தறை வீட்டு விலைகள் $520,000லிருந்தும் தொடங்குகின்றன.
இந்த வீட்டுத் திட்டம் 2026 இரண்டாம் காலாண்டில் கட்டி முடிக்கப்படும் என்பதால் வீடு வாங்குவோர் மூன்று ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும்.
முதிர்ச்சி அடையாத பேட்டைகளில் மூன்று வீட்டுத் திட்டங்கள் இடம்பெறுகின்றன.
உட்லண்ட்ஸ் சௌத் பிளேன்ஸ் திட்டத்தின்கீழ் ஆறு புளோக்குகளில் 630 ஈரறை, மூவறை, நாலறை வீடுகள் கட்டப்படவுள்ளன.
மூவறை வீட்டு விலைகள் $188,000லிருந்தும் நாலறை வீட்டு விலைகள் $303,000லிருந்தும் தொடங்குகின்றன.
இந்த வீட்டுத் திட்டம் 2027 முதலாம் காலாண்டில் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் வீடு வாங்குவோர் மூன்றே முக்கால் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
சுவா சூ காங்கில் கியட் ஹோங் கிரேஞ்ச் எனும் திட்டத்தின்கீழ் 987 ஈரறை ஃபிளெக்சி, மூவறை, நாலறை, ஐந்தறை வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
நாலறை வீட்டு விலைகள் $277,000லிருந்தும் ஐந்தறை வீட்டு விலைகள் $390,000லிருந்தும் தொடங்குகின்றன.
இந்த வீட்டுத் திட்டம் 2026 கடைசிக் காலாண்டில் நிறைவு செய்யப்படும் என்பதால் வீடு வாங்குவோர் மூன்றரை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
ஜூரோங் ஈஸ்ட் பிரீஸ் திட்டத்தின்கீழ் 562 ஈரறை ஃபிளெக்சி, மூவறை, நாலறை வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
மூவறை வீட்டு விலைகள் $194,000லிருந்தும் நாலறை வீட்டு விலைகள் $283,000லிருந்தும் தொடங்குகின்றன.
இந்த வீட்டுத் திட்டம் 2028 இரண்டாம் காலாண்டில் நிறைவு செய்யப்படும் என்பதால் வீடு வாங்குவோர் ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
வீடு வாங்குவோர் செப்டம்பர் 5ஆம் தேதி இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்படும்.

