விமானப் போக்குவரத்துத் துறையில் கூடிவரும் தேவையைப் பூர்த்திசெய்ய இலக்கு
ஆண்டிறுதிக் காலகட்டத்தில் சிங்கப்பூருக்குக் கூடுதலான சுற்றுப்பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அதைச் சமாளிக்க, விமானப் போக்குவரத்துத் துறை ஆண்டிறுதிக்குள் மேலும் 3,500 முதல் 4,000 ஊழியர்கள் வரை பணியமர்த்த வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையத்திற்கு நேற்று வருகையளித்த அவர் இதனைத் தெரிவித்தார்.
அக்டோபர் முதல், விமானச் சேவை எண்ணிக்கை கொவிட்-19க்கு முன்பிருந்த அளவில் 80 விழுக்காட்டை எட்ட சிங்கப்பூர் தயாராக வேண்டும் என்று அவர் கூறினார். தற்போது இந்த அளவு 64 விழுக்காடாக உள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் அதன் எல்லைகளை மீண்டும் திறந்ததைத் தொடர்ந்து, பயணிகள் எண்ணிக்கை நிலையாக உயர்ந்து, தற்போது 58 விழுக்காடாக உள்ளது.
போக்குவரத்து அதிகரித்து வருவதற்கு ஏற்ப போதுமான மனிதவளம் தேவை என்று கூறிய திரு ஈஸ்வரன், விமானப் போக்குவரத்துத் துறையில் கடந்த ஈராண்டுகளில் ஏறக்குறைய 10,000 ஊழியர்கள் குறைக்கப்பட்டதாகச் சொன்னார். கொவிட்-19க்கு முன்பிருந்த நிலையில் பணியிலிருந்த 35,000 ஊழியர்களில் இது கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காகும்.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் இத்துறையில் 4,000க்கும் அதிகமானோர் பணியமர்த்தப்பட்டனர். மேலும் 4,000 பேரைப் பணியமர்த்துவதன் மூலம் ஊழியர் எண்ணிக்கை ஏறக்குறைய 33,000ஐ எட்டும்.
"இது எளிதான பணியன்று. பணியமர்த்தப்படுவோர் தேவையான பயிற்சியைப் பெற்றிருப்பதை நாங்கள் உறுதிசெய்ய வேண்டும். இது ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையாகும். அனைத்து பங்குதாரர்களும் இதில் கவனம் செலுத்தி வருகின்றனர்," என்றார் திரு ஈஸ்வரன்.
இதற்கான ஆயத்தப் பணிகள் நன்றாக நடைபெற்று வருவதாக அவர் சொன்னார்.
"ஆண்டிறுதிக்குள் ஏறத்தாழ 70 மில்லியன் பயணிகளைக் கையாள முடிவதை உறுதிசெய்ய, எங்களது இலக்கை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
நான்காம் முனையம் செப்டம்பர் 13ஆம் தேதிதான் அதிகாரபூர்வமாகத் திறக்கப்படும் என்றாலும், ஐந்து விமானங்கள் இங்கிருந்து நேற்று புறப்படவிருந்தன.
ஹாங்காங்கிற்கு புறப்பட்ட கேத்தே பசிஃபிக் விமானமே நான்காம் முனையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட முதல் விமானமாகும்.
இதற்கிடையே, மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஜெட்ஸ்டார் ஒன்றாம் முனையத்தில் இருந்து நான்காம் முனையத்திற்கு மாற மறுப்பு தெரிவித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள வேளையில், விமான நிலையக் குழுமம் நிர்ணயித்துள்ள அக்டோபர் 25 காலக்கெடுவுக்குள் அது இடம் மாறுமா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை.
ஜெட்ஸ்டார் நிறுவனத்தின் செயல்பாட்டுத் தேவைகளையும் அதன் பயணிகளின் தேவைகளையும் எப்படி பூர்த்தி செய்வது என்பது பற்றி ஜெட்ஸ்டாரும் சாங்கி விமான நிலையக் குழுமமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திரு ஈஸ்வரன் சொன்னார்.
அக்டோபர் 25க்குள் ஜெட்ஸ்டார் இடம் மாறுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இதை விரைவாக செய்வதற்குப் பதிலாக சிறப்பாகச் செய்வதே முக்கியம்," என்று அவர் பதிலளித்தார்.
இருதரப்புக்கும் வெற்றி கிடைப்பதன் அடிப்படையில் அவை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் சொன்னார்.

