ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவுக்கு வெளியே அதிகமானோருக்கு திரு கௌதம் அதானியைப் (படம்) பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
கல்லூரியில் இருந்து விலகி தொடக்கத்தில் வைர வர்த்தகம் புரிந்த இவர், பின்னர் நிலக்கரி பக்கம் கவனத்தைத் திருப்பினார். தொழிலை பெரிய அளவில் விரிவுபடுத்திய இவர், இப்போது உலகின் மூன்றாவது பெரும் பணக்காரர் ஆகியுள்ளார்.
புளூம்பர்க் பெரும் பணக்காரர்கள் குறியீட்டில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்த முதல் ஆசியர் என்ற பெருமை திரு அதானியைச் சென்றுசேரும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் முகேஷ் அம்பானியோ அலிபாபா இணை நிறுவனர் ஜேக் மாவோ பணக்காரர்கள் பட்டியலில் இவ்வளவு உயரத்தை எட்டியதில்லை.
US$137.4 பில்லியன் (S$191.8 பி.) செல்வத்துக்குச் சொந்தக்காரரான திரு அதானி, டெஸ்லா தலைமை நிர்வாகி எலோன் மஸ்க், அமேசான்.காம் நிறுவனர் ஜெஃப் பெசோஸுக்கு அடுத்த நிலையில் உள்ளார்.
நிலக்கரி முதல் துறைமுகம் வரை கடந்த சில ஆண்டுகளாக தமது தொழிலை விரிவுபடுத்திய திரு அதானி, 60, தரவு மையங்கள், சிமெண்ட், ஊடகம் எனப் பல்வேறு தொழில்துறைகளில் கால்பதித்துள்ளார்.
இந்தியாவின் ஆகப் பெரிய தனியார் துறைமுகம், விமான நிலைய நடத்துநர், சிட்டி-கேஸ் விநியோகிப்பாளர், நிலக்கரிச் சுரங்கம் ஆகியவை அதானி குழுமத்துக்குச் சொந்தமானவை.
இவ்வாண்டு மட்டும் திரு அதானி தமது செல்வத்தில் US$60.9 பில்லியனைச் சேர்த்தார். கடந்த பிப்ரவரியில் திரு முகேஷ் அம்பானியை முந்திக்கொண்டு ஆசியாவிலேயே ஆகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை திரு அதானி பெற்றார். கடந்த மாதம் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்சை விஞ்சி உலகின் நான்காவது பெரும் பணக்காரர் என்ற நிலையை இவர் எட்டினார்.
அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் சிலர் அண்மையில் நன்கொடை வழங்குவதை அதிகரித்ததால் திரு அதானியால் அவர்களை முந்த முடிந்தது.
பில் & மெலிண்டா கேட்ஸ் அறநிறுவனத்துக்கு US$20 பில்லியனை தாம் மாற்றிவிட்டதாக கடந்த மாதம் திரு பில் கேட்ஸ் அறிவித்திருந்தார். பெர்க்ஷியர் ஹேதவே தலைமை நிர்வாகி வாரன் பஃபெட் ஏற்கெனவே US$35 பில்லியனுக்கு மேல் நன்கொடை வழங்கினார்.
திரு அதானியும் அறக்கொடை அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கி வருகிறார். தமது 60வது பிறந்தநாளைக் குறிக்கும் விதமாக, கடந்த ஜூன் மாதம் US$7.7 பில்லியன் நன்கொடை வழங்குவதாக உறுதி அளித்தார்.