முன்னாள் ஒலிம்பிக் வெற்றியாளர் ஜோசஃப் ஸ்கூலிங்கும் தேசிய நீச்சல் வீராங்கனை அமெண்டா லிம்மும் (படங்கள்) போதைப்பொருள் உட்கொண்டது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்போர்ட் சிங்கப்பூர் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில், கஞ்சா உட்கொண்டது தொடர்பான குற்றங்கள் குறித்து இவ்விருவரிடமும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு விசாரணை நடத்தியதாகத் தெரிவித்தது. இந்த விசாரணையின் முடிவில், போதைப்பொருள் பயன்பாட்டுச் சட்டத்தின்கீழ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு லிம்முக்கு கடுமையான எச்சரிகை விதித்தது. ஸ்கூலிங் தற்போது தேசிய சேவையாற்றி வருவதால், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க தற்காப்பு அமைச்சிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். தற்காப்பு அமைச்சு வெளியிட்ட மற்றோர் அறிக்கையில், போதைப்பொருள் புழக்கத்தை சிங்கப்பூர் ஆயுதப் படை அறவே சகித்துக்கொள்ளாது என்று கூறியது. தேசிய சேவையாளர்கள் போதைப்பொருள் உட்கொண்டது உறுதிசெய்யப்பட்டால் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுதப் படையின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுவர்.
கடந்த மே மாதம் வெளிநாட்டில் இருந்தபோது தாம் கஞ்சா உட்கொண்டதை ஸ்கூலிங் ஒப்புக்கொண்டார். அப்போது இவர் தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்காக பயிற்சி பெற்று அதில் பங்குபெற முழுநேர தேசிய சேவையிலிருந்து சிறிதுகாலம் விடுப்பு எடுத்துக்கொண்ட காலகட்டம் அது. இந்நிலையில், போதைப்பொருள் உட்கொண்டதற்காக ஸ்கூலிங் மன்னிப்பு கேட்டுக்கொண்டு உள்ளார்.
"எனது செயல்கள் என்னைச் சுற்றியுள்ளவர்கள், குறிப்பாக என் குடும்பத்தார், இளம் ரசிகர்களுக்குத் துன்பத்தை அளித்துள்ளது. இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்வின் சவால்மிக்க காலகட்டத்தில் மனத்தளவில் பலவீனமடைந்து இந்தத் தவற்றைச் செய்துவிட்டேன்," என்று வருத்தம் தெரிவித்தார் ஸ்கூலிங்.

