கிராப் நிறுவனமும் சிங்டெல் நிறுவனமும் இணைந்து ஏற்படுத்தி இருக்கும் 'ஜிஎக்ஸ்எஸ்' மின்னிலக்க வங்கி, சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் மின்னிலக்க வங்கி ஒன்று சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்துவது இதுவே முதல்முறை.
இம்மாதம் 5ஆம் தேதி முதல், 'ஜிஎக்ஸ்எஸ் சேவிங்ஸ் அக்கவுன்ட்' செயலியை ஆப்பிள் திறன்பேசியின் 'ஆப் ஸ்டோர்', 'கூகல் பிளே ஸ்டோர்' இரண்டிலிருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.
தொழில் முனைவர்கள், தன்னுரிமைத் தொழிலர்கள், முதல்முறை வேலைக்குச் செல்வோர் போன்றோரின் தேவைகளுக்கு ஆதரவு வழங்குவது நோக்கம் என்று 'ஜிஎக்ஸ்எஸ்' மின்னிலக்க வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சார்ல்ஸ் வோங் கூறினார்.
பயனீட்டாளர்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் 'ஜிஎக்ஸ்எஸ்' சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சத் தொகை வைத்திருப்பது கட்டாயமில்லை. அத்துடன் கணக்கில் வைத்திருக்கும் தொகைக்கான வட்டி நாள் அடிப்படையில் கணக்கிடப்படும்.
பாரம்பரிய வங்கிகளின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சத் தொகை இருக்க வேண்டியது அவசியம். அவை வட்டியை மாத அடிப்படையில் கணக்கிட்டு, மாத இறுதியில் வழங்கும் நடைமுறையைப் பின்பற்றுகின்றன.
முதற்கட்டமாக, 'ஜிஎக்ஸ்எஸ்' மின்னிலக்க வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது கணக்கில் அதிகபட்சமாக ஆண்டுக்கு $5,000 வரை செலுத்தலாம். அதற்கு ஆண்டுக்கு 0.08% என்ற விகிதத்தில், நாள் வட்டி கணக்கிட்டு வழங்கப்படும்.
ஒரே கணக்கின்கீழ் படிப்புச் செலவு, விடுமுறை எனத் தனித்தனியாக எட்டுப் பிரிவுகளில் சேமிக்கலாம். அவற்றுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு 1.58% எனும் விகிதத்தில் வட்டி கணக்கிடப்படும்.
சிங்கப்பூர் நாணய ஆணையம் கடந்த 2020 டிசம்பரில் முழுமையான மின்னிலக்க வங்கி சேவைக்கு இரண்டு வங்கிகளுக்கு உரிமம் வழங்கியது. அதில் ஒன்று 'ஜிஎக்ஸ்எஸ்'. இன்னொன்று, தொழில்நுட்பப் பெருநிறுவனமான 'சீ'யின் 'மேரிபேங்க்'.
இந்நிலையில், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி மற்றும் என்டியுசியின் ஆதரவுடன் கூடிய 'டிரஸ்ட் வங்கி', தனது மின்னிலக்க வங்கி சேவைகளை இன்று அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னிலக்க வங்கிகள் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு கணக்குகள், வைப்புத்தொகைகள், கடன், பற்று அட்டைகள் போன்ற சேவைகளை வழங்க முடியும். அத்துடன், பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கும் அவை சேவைவழங்க முடியும். ஆனால், மின்னிலக்க வங்கிகளில் அனைத்து வங்கியியல் சேவைகளும் இணைய முறையில் மட்டுமே இடம்பெறும்.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் தரவுப் பாதுகாப்பு நம்பகச்சான்று பெற்ற சிங்கப்பூரின் முதல் மின்னிலக்க வங்கி 'ஜிஎக்ஸ்எஸ்' வங்கிதான் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்பான தரவுப் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றும் நிறுவனத்திற்கு இச்சான்றிதழ் வழங்கப்படும்.

