அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பனிப்போரை முடிவிற்கு கொண்டு வந்த மிக்கைல் கோர்பசோவ் காலமானார். இவருக்கு வயது 91.
சோவியத் ஒன்றியத்தின் கடைசி அதிபராகத் திகழ்ந்த திரு கோர்பசோவ், இரும்புத்திரை நாடு என அறியப்பட்ட சோவியத் ஒன்றியத்தை உலக நாடுகளுக்குத் திறந்துவிட்டார்; அமெரிக்காவுடன் ஆயுதக் குறைப்பு உடன்பாடு செய்துகொண்டார்; இரண்டாகப் பிரிந்த ஜெர்மனி மீண்டும் ஒரே நாடாக இணைய வழிவகுத்தார்.
ஆனாலும், சோவியத் ஒன்றியம் பல நாடுகளாகப் பிரிவதை இவரால் தடுக்க முடியவில்லை.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த திரு கோர்பசோவ் நேற்று முன்தினம் இரவு காலமானார் என்று ரஷ்யாவின் மத்திய மருத்துவமனையின் அறிக்கையைச் சுட்டி, அந்நாட்டின் இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
திரு கோர்பசோவின் மறைவிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
"உலக வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அரசியல்வாதியாகவும் அரசதந்திரியாகவும் திரு கோர்பசோவ் திகழ்ந்தார்," என்று தமது இரங்கல் செய்தியில் அதிபர் புட்டின் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சோவியத் ஒன்றியம் துண்டு துண்டானதே 20ஆம் நூற்றாண்டின் ஆக மோசமான புவிசார் அரசியல் பேரழிவு என்று அதிபர் புட்டின் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
திரு கோர்பசோவிற்கு 1990ஆம் ஆண்டில் நோபெல் பரிசு வழங்கப்பட்டது.
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நோவோடெவிச்சி இடுகாட்டில் தம் மனைவி ரைசாவிற்கு அருகிலேயே திரு கோர்பசோவ் நல்லடக்கம் செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது. திருவாட்டி ரைசா 1999ஆம் ஆண்டிலேயே இறந்துவிட்டார்.
1985ஆம் ஆண்டு தமது 54 வயதில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற திரு கோர்பசோவ், பல அரசியல், பொருளியல் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
உலகத் தலைவர்கள் இரங்கல்
திரு கோர்பசோவின் மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திரு கோர்பசோவை அரியதொரு தலைவர் எனக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பனிப்போர் காலத்தில் நிலவிய பதற்றங்களுக்கு இடையே மாறுபட்ட எதிர்காலம் சாத்தியமானது என்று கற்பனை செய்து பார்க்க முடிந்த தனித்துவமான அரசியல்வாதி என்றும் புகழாரம் சூட்டினார்.
திரு கோர்பசோவின் துணிச்சலையும் நேர்மையையும் வியந்து போற்றிய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், "உக்ரேன்மீது புட்டின் படையெடுத்துள்ள இந்தக் காலகட்டத்தில், சோவியத் சமூகத்தை உலக நாடுகளுக்குத் திறந்துவிட அவர் கொண்டிருந்த களைப்பறியாக் கடப்பாடு நமக்கெல்லாம் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது," என்று கூறினார்.
நம்பகமான, மதிப்பிற்குரிய தலைவர் என்றும் சுதந்திரமான ஐரோப்பாவிற்கு வழியமைத்துக் கொடுத்தவர் என்றும் திரு கோர்பசோவைப் பாராட்டினார் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லெயன். அவர் விட்டுச்சென்ற மரபை நாம் ஒருபோதும் மறத்தலாகாது என்றும் திருவாட்டி உர்சுலா சொன்னார்.

