பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குறைந்தது 650,000 கர்ப்பிணிகள் சிக்கியிருப்பதாக ஐக்கிய நாட்டு மக்கள்தொகை நிதிய (யுஎன்எஃப்பிஏ) அமைப்பு தெரிவித்துள்ளது.
அவர்களுள் 73,000 பேருக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் அவர்கள் அனைவருக்கும் உடனடியாக மகப்பேற்று மருத்துவ உதவி தேவைப்படுவதாக அந்த அமைப்பு கூறுகிறது.
பாகிஸ்தானில் மழை, வெள்ளத்தால் கிட்டத்தட்ட 33 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதனால் பல பெண்களும் குழந்தைகளும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு ஆளாகும் அபாயமிருப்பதாகவும் பாலின, இனப்பெருக்க சுகாதார அமைப்பான யுஎன்எஃப்பிஏ எச்சரித்துள்ளது.
"மிகுந்த சவாலான சூழ்நிலையிலும்கூட, கர்ப்பிணிகளுக்கும் புதிய தாய்ர்மார்களுக்கும் உயிர்காப்பு சேவைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்வதற்குப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்," என்று ஐநா மக்கள்தொகை நிதிய அமைப்பின் பாகிஸ்தான் பிரதிநிதி டாக்டர் பக்தியோர் கதிரோவ் கூறினார்.
சிந்து மாநிலத்தில் 1,000க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்களும் பலுசிஸ்தானில் 198 சுகாதார நிலையங்களும் சேதமடைந்துவிட்டதாக ஐநா மக்கள்தொகை நிதியம் தெரிவித்தது. அத்துடன், சாலைகளும் பாலங்களும் சேதமடைந்துள்ளதால் பெண்கள் சுகாதார நிலையங்களுக்குச் செல்வதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவசரகால உதவியாக சிந்து, பலுசிஸ்தான், கைபர் பக்துன்குவா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு அதிகளவில் மகப்பேற்று மருத்துவ உதவிச் சாதனங்களை ஐநா மக்கள்தொகை நிதியம் வழங்கியிருக்கிறது.
பெரும் சுகாதார நெருக்கடி அபாயம்
இதனிடையே, பாகிஸ்தானில் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பு வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்கு பெரும் சுகாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
"அழுக்கான நீர் சூழ்ந்துள்ளதாலும் சுகாதாரமற்ற சூழலாலும் சுகாதார தோல் நோய்கள்தான் முக்கியப் பிரச்சினை," என்று சிந்து மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் சஜ்ஜத் மேமன் கூறினார்.
சிரங்கு மற்றும் பூஞ்சைத்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக அப்துல் அஸிஸ் என்ற இன்னொரு மருத்துவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பாகிஸ்தானில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மலேரியா, டெங்கிக் காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயமும் நிலவுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,162ஆக உயர்ந்துவிட்டது. அவர்களில் குறைந்தது 380 பேர் குழந்தைகள் என்று பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

