பிரிட்டனின் புதிய பிரதமராக 47 வயது லிஸ் டிரஸ் தேர்வாகியுள்ளார். இப்பதவிக்கான இறுதிச் சுற்றில் போட்டியிட்ட திருவாட்டி டிரஸ், 81,326 வாக்குகளையும் (57.4%) திரு ரிஷி சுனக் 60,399 வாக்குகளையும் (42.6%) பெற்றிருந்தனர். கிட்டத்தட்ட 172,000 கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ததை அடுத்து முன்னாள் நிதி அமைச்சரான 42 வயது திரு ரிஷி சுனக்கை இவர் வென்றுள்ளார்.
இந்நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சிக்குத் தலைவராகவும் லிஸ் டிரஸ் பொறுப்பேற்கிறார்.
பிரிட்டனின் பிரதமர் பொறுப்பை ஏற்கும் மூன்றாவது பெண் இவர் ஆவார்.
கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற கடந்த எட்டு வாரங்களாக திருவாட்டி டிரசும் திரு சுனக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
வெற்றி பெற்றதை அடுத்து திருவாட்டி டிரஸ் நிகழ்த்திய உரையில், வரிக் குறைப்பு, பொருளியல் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவது குறித்த திட்டத்தைத் தாம் முன்வைக்க உள்ளதாகக் கூறினார்.
"வரிக் குறைப்பு, பொருளியல் வளர்ச்சி தொடர்பான துணிவுமிக்க ஒரு திட்டத்தை நான் அறிவிப்பேன். எரிசக்தி நெருக்கடி குறித்தும் பேசுவேன். மக்களின் எரிசக்திக் கட்டணம் பற்றி மட்டுமல்லாமல் எரிசக்தி விநியோகம் தொடர்பான நமது நீண்டகால பிரச்சினைகள் குறித்தும் அது விளக்கும்," என்றார் அவர்.
பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவி வகித்தபோது பல்வேறு குறைகூறல்களுக்கு ஆளானார்.
ரிஷி சுனக் உள்ளிட்ட ஜான்சனின் சொந்த கட்சியைச் சேர்ந்த சிலர் அமைச்சர் பதவியிலிருந்து விலகிய நிலையில் ஜான்சனும் பதவி விலக நேரிட்டது.
அவரின் இடத்தைப் பிடிக்கும் தகுதியுடையவராக திருவாட்டி டிரஸ் பல காலமாகவே கருதப்பட்டவர் ஆவார். 2015ஆம் ஆண்டு தேர்தலை அடுத்து பதவிக்கு வரும் கன்சர்வேட்டிவ் கட்சியின் நான்காவது பிரதமர் இவர்.
தற்போது நீண்ட பொருளாதார நெருக்கடியை பிரிட்டன் எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனின் உயரும் வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க, தாம் உடனடியாகச் செயல்படவுள்ளதாக திரு டிரஸ் உறுதியளித்துள்ளார்.
இதற்காக எரிசக்தி கட்டணத்தைச் சமாளிப்பது தொடர்பான திட்டத்தை ஒரு வாரத்திற்குள் அவர் முன்வைப்பார் என்று கூறப்படுகிறது.
குளிர்காலம் நெருங்குகையில், அதிகப்படியான எரிசக்தி கட்டணங்களைக் கட்ட முடியாமல் போகலாம் என்ற மில்லியன் கணக்கான மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் திட்டம் அமையும் என்று திருவாட்டி டிரஸ் கூறியுள்ளார்.
தமது பிரதமர் தேர்தல் பிரசாரத்தின்போது வரி அதிகரிப்பையும் இதர வரிகளையும் நீக்குவதை நடைமுறைப்படுத்த தாம் முயற்சி செய்யவிருப்பதாக திருவாட்டி டிரஸ் கூறியிருந்தார்.
இதற்கிடையே சவால்மிக்க அம்சங்களுடைய நீண்டதொரு பட்டியலை திருவாட்டி டிரஸ் நிறைவேற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 12 ஆண்டுகாலமாக கன்சர்வேட்டிவ் அரசாங்கம் சரிவர இயங்காத காரணத்தால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
போரிஸ் ஜான்சனின் அமைச்சரவைக்குக் கடைசிவரை ஆதரவாக திருவாட்டி டிரஸ் இருந்ததுடன் பிரெக்சிட்டிக்குப் பிறகு பல முக்கியமான திறந்த வர்த்தகக் கொள்கைகளுக்குக் காரணமாகவும் இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
ஆக்ஸ்ஃபர்ட் பட்டதாரி 2010ஆம் ஆண்டில் கன்சர்வேட்டிவ் எம்பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரெக்சிட்டுக்கு எதிராக வலுவாகக் குரல்கொடுத்தார்.
போரிஸ் ஜான்சன் ஆட்சியின்கீழ் அனைத்துலக வர்த்தக அமைச்சராகவும் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றினார்.
பெரும் வரிக் கழிவு கோரி கட்சி உறுப்பினர்களுடன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இன்று எலிசபெத் ராணியின் முன்னிலையில் பிரதமராகப் பதவி ஏற்கிறார்.