சிங்கப்பூரின் சாலை உணவு கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பல்சுவை உணவு நிகழ்ச்சி ஒன்று லிட்டில் இந்தியாவில் நாளை நடத்தப்படுகிறது. பர்ச் ரோட்டில் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ள உணவு விழாவில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறும்.
வடை, சமோசா முதல் பல்வேறு உணவு வகைகளை இங்கு சென்று சுவைத்து மகிழலாம். அனுமதியும் உணவும் இலவசம். இந்த உணவு விழாவைச் சிறப்பிக்க இந்திய உணவகங்கள், பள்ளிக்கூடங்கள், தூதர கங்கள் மற்றும் இதர அமைப்புகள் கைகோத்துள்ளன. மொகல் மகால் உண வகம் சிறப்பு சமோசாவை இவ்விழாவில் வழங்கும்.
அதேபோல ஜாலான் புசார் இந்திய நற்பணி செயற்குழு இனிப்பு தேங்காய் பலகாரத்தையும் அபிராமி ஜூவல்லர்ஸ் பீட்ரூட் வடையையும் அறிமுகம் செய்ய உள்ளன. விழா அரங்குகளில் சைவம், அசைவம், ஹலால் உணவுகளை வருகை யாளர்கள் ருசிக்கலாம், ரசிக்கலாம்.
'லிஷா' எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் மகளிர் பிரிவு தலைவர் ஜாய்ஸ் கிங்ஸ்லி கூறுகையில், "பல்வேறு உணவகங்களின் தயாரிப்புகளை ஒரே இடத்தில் கொண்டு வருவதன் மூலம் சிங்கப்பூரர்கள், சுற்றுப் பயணிகள், இவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஒரே சாலையில் தங்களுக்குப் பிடித்த உணவு வகைகளைப் பெறலாம்," என்றார்.
நாளைய உணவு விழாவுக்கு சிண்டாவும் தேசிய ஒருங்கிணைப்பு மன்றமும் ஆதரவு தெரிவித்துள்ளன. நிதி, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் விழாவின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். மலேசியா, துருக்கி, ஆஸ்தி ரேலியா போன்ற நாடுகளின் தூதர்களும் வருகையளிப்பர்.
அடுத்த மாதம் 24ஆம் தேதி கொண்டா டப்பட உள்ள தீபாவளித் திருநாளையொட்டி உணவு விழா இடம்பெறுகிறது.

