பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் அரசியாரின் இறுதி ஊர்வலம் நேற்று தொடங்கியது. முதலில், அரசியார் மரணமடைந்த பால்மோரல் அரண்மனையில் இருந்து எடின்பர்க் வரை அவரின் நல்லுடல் பேழை கொண்டு செல்லப்பட்டது.
அரசியாரின் நல்லுடலைச் சுமந்து செல்லும் வாகனம் நேற்று லண்டன் நேரப்படி காலை 10 மணிக்கு இறுதிப் பயணத்தைத் தொடங்கியது.
ஸ்காட்லாந்து நகர்களின் வழியாக ஆறு மணி நேரம் பயணம் செய்து எடின்பர்க்கில் உள்ள ஹோலி ரூட் ஹவுஸ் அரண்மனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக இரண்டு நாள் அரசியாரின் நல்லுடல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் திங்கட்கிழமை எடின்பர்க் சென்று அங்கு நடக்கும் வழிபாட்டில் கலந்துகொள்வார்.
பிறகு அரசியாரின் நல்லுடல் தலைநகர் லண்டனுக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு நான்கு நாள்கள் நல்லுடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருக்கும். பிறகு செப்டம்பர் 19ஆம் தேதி இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்கைக் காண ஒரு மில்லியன் மக்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள மக்களும் அதைப் பார்ப்பார்கள்.
ஏராளமான நாடுகளின் தலைவர்கள் அதில் கலந்துகொள்வார்கள். இரண்டாம் எலிசபெத் அரசியார் தனது 96வது வயதில் இம்மாதம் 8ஆம் தேதி மரணமடைந்தார். அவர், உலகின் பல நாடுகளுக்கும் அரசமைப்புச் சட்டப்படி அரசியாக இருந்து வந்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் தலைநகர்களில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் அந்த இரண்டு நாடுகளுக்கும் இனி மூன்றாம் சார்ல்ஸ் அரசர் பொறுப்பை ஏற்கிறார் என்று பிரகடனப்படுத்தப்பட்டது.
நியூசிலாந்தில் வெல்லிங்டன் நகரில் நாடாளுமன்றத்தில் அந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிட்டிஷ் பேரரசின் பிரதிநிதியான கவர்னர் ஜெனரல் டேவிட் ஹார்லி, கேன்பராவில் 21 குண்டுகள் முழங்க நாடாளுமன்றத்தில் நேற்று அந்தப் பிரகடனத்தை வெளியிட்டார்.

