பொருட்குவிப்பைச் சமாளிக்க அமலாக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும்: சிம் ஆன்

பொருட்குவிப்பைச் சமாளிக்க அமலாக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும்: சிம் ஆன்

2 mins read

அடுக்­கு­மா­டி வீடுகளின் பொதுத் தாழ்­வா­ரங்­களில் பொருள்­க­ளைக் குவித்­து­வைக்கும் பிரச்சினையைச் சமா­ளிக்­கும் பொருட்டு, வரும் மாதங்­களில் அர­சாங்க அமைப்­பு­களும் நகர மன்­றங்­களும் அம­லாக்க நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­வி­டும் என்று தேசிய வளர்ச்சி மூத்த அமைச்­சர் சிம் ஆன் தெரி­வித்­துள்­ளார்.

பொதுத் தாழ்வாரங்களில் பொருள்­களைக் குவித்­து­வைப்­ப­தால் ஏற்­படும் அபா­யங்­கள் பற்றிப் பொது­மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தும் நட­வடிக்­கை­களும் முடுக்­கி­வி­டப்­படும் என்று நாடாளு­மன்­றத்­தில் நேற்று அவர் கூறி­னார்.

அண்­மை­யில் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­களில் இரண்டு தீச்­சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன. அதில் ஒன்­றில் ஆட­வர் ஒரு­வர் மாண்­டு­போ­னார். அவற்­றில் ஒரு வீட்­டிற்கு வெளியே பொதுத் தாழ்­வா­ரத்­தி­லும் இன்­னொரு வீட்­டினுள்­ளே­யும் பொருள்­கள் குவித்து வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

பொருள் குவித்து வைக்­கப்­படும் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வு­காண்­ப­தற்­காக 2014ஆம் ஆண்டு பல அமைப்­பு­கள் அடங்­கிய ஒரு குழு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அதன்­மூ­லம் இவ்வாண்டு முற்­பா­தி­யில் 210 சம்­ப­வங்­களில் பொருட்குவிப்பின் தீவி­ரத்­தன்­மை­யைக் குறைக்க முடிந்­த­தாக திருவாட்டி சிம் ஆன் குறிப்­பிட்­டார்.

மீண்­டும் பொருள்­கள் குவி­யா­மல் தடுக்க அவ்­வி­டங்­கள் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் சொன்­னார்.

அச்சம்­ப­வங்­களில், பொதுச் சுகா­தா­ரத்­திற்­கும் பாது­காப்­பிற்­கும் ஆபத்து இல்லாதபடி, பொருட்­கு­வி­யல் 'பாது­காப்­பான அள­விற்கு' குறைக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசிய வளர்ச்சி அமைச்சு தெரி­வித்­தது.

இப்­போ­தைக்கு அத்­த­கைய 260 சம்­ப­வங்­கள் தொடர்­பில் பொருட்­கு­வி­யல் மேலாண்மை முதன்­மைக் குழு பணி­யாற்றி வரு­வ­தாக திருவாட்டி சிம் ஆன் கூறி­னார். "பொருள்­களை அகற்ற, அவற்­றைக் குவித்து வைத்­துள்ளோரின் ஒத்­து­ழைப்­பைப் பெறு­வது கடி­ன­மாக இருப்­ப­தால் இந்­தச் சிக்­க­லான சம்­ப­வங்­கள் நீண்­ட­கா­ல­மா­கத் தீர்க்­கப்­ப­டா­மல் உள்­ளன," என்­றார் அவர்.

ஆனா­லும், குவித்து வைக்­கப்­பட்­டுள்ள பொருள்­களை அகற்­று­வது தொடர்­பில் அதி­கா­ரி­கள் மீண்­டும் மீண்­டும் உரி­ய­வர்­களை நாட­வும் அவர்­களை இணங்க வைக்க வேண்­டி­யுள்­ளது என்­றும் சில நேரங்­களில் சமூ­கப் பணி­யா­ளர்­க­ளை­யும் மன­நல வல்­லு­நர்­க­ளை­யும் உத­விக்கு அழைக்க வேண்­டி­யுள்­ளது என்­றும் திருவாட்டி சிம் ஆன் கூறி­னார்.

"பொதுச் சுகா­தார, பாது­காப்­புக் கார­ணங்­க­ளுக்­காக ஆணை­கள் பிறப்­பிக்­கப்­பட்டு, பொருள்­க­ளைக் குவித்து வைத்­துள்­ள­வர்­கள் ஒத்­து­ழைக்­கும் பட்­சத்­தில், தொண்­டூ­ழி­யர்­க­ளின் துணை­யு­டன் அவற்றை அப்­பு­றப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுப்­போம்,' என்­றார் அவர்.

இருப்­பி­னும், தாங்­கள் குவித்து வைத்­துள்ள பொருள்­க­ளைக் கைவிட சிலர் விரும்­பா­மல் போனால், பொதுச் சுகா­தா­ரம் மற்­றும் பாது­காப்பு கருதி உறு­தி­யாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அமைச்­சர் சொன்­னார்.

பொருள்­க­ளைக் குவித்து வைக்­கும் பிரச்­சி­னைக்­குத் தீர்­வு­காண்­ப­தில் உள்ள சவால்­க­ளைப் பொது­மக்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.