இந்தியத் துறைமுகங்களில் ஏற்றுமதி செய்ய முடியாமல் ஏறக்குறைய ஒரு மில்லியன் டன் அரிசி தேக்கமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்த விலைக்குமேல் கூடுதலாக 20% ஏற்றுமதி வரி செலுத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால், அரிசி ஏற்றுமதியாளர்கள் இதனை ஏற்க மறுப்பதாக 'ராய்ட்டர்ஸ்' செய்தி தெரிவிக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் புதிய ஏற்றுமதி வரி நடப்பிற்கு வந்தது.
"அரிசி வாங்குவோர் புதிய வரியைச் செலுத்த மறுப்பதால் நாங்களும் அரிசியைக் கப்பலில் ஏற்றுவதை நிறுத்திவிட்டோம்," என்றார் அனைத்திந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.வி.கிருஷ்ணராவ்.
இந்தியாவில் இவ்வாண்டு சராசரிக்கும் குறைவாகப் பருவமழை பெய்ததை அடுத்து, நெல் பயிரிடுவது குறைந்துள்ளது. இதனால் உள்ளூரில் அரிசி விநியோகத்தைச் சீர்படுத்தி, விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நொய்யரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்திருக்கிறது.
அத்துடன், புழுங்கல் அரிசி நீங்கலாக, பாசுமதி அரிசி அல்லாத மற்ற வகை அரிசிகளுக்கு 20% ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
"இதுபோன்ற சூழல்களில், முன்பெல்லாம் அரசாங்கத்தின் கொள்கை மாற்றம் நடப்பிற்கு வரும்வரை, கடன் சான்றுகளுடன் கூடிய ஒப்பந்தங்களுக்கு அரசாங்கம் விதிவிலக்கு அளித்தது. அதுபோல இம்முறையும் விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும்," என்றார் இந்தியாவின் ஆகப் பெரிய அரிசி ஏற்றுமதியாளரான சத்யம் பாலாஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹிமான்சு அகர்வால்.
உலகிலேயே அரிசி அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான். ஒவ்வொரு மாதமும் அந்நாடு இரண்டு மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்கிறது.
ஏற்கெனவே உணவுப்பொருள்களின் விலை உயர்ந்துவரும் நிலையில், இந்தியாவும் அரிசி ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதித்தால் விலையேற்றம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

