கடந்த வியாழக்கிழமை தமது 96வது வயதில் காலமான பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் அரசியாருக்கு சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நேற்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பார்வையாளர்கள் பகுதியில் இருந்தபடி சிங்கப்பூருக்கான பிரிட்டிஷ் தூதர் காரா ஓவனும் இந்நிகழ்வில் இணைந்துகொண்டார்.
அரசியாருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது என்றும் அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு என்றும் நாடாளுமன்ற அவைத் தலைவர் இந்திராணி ராஜா புகழஞ்சலி செலுத்தினார்.
சிங்கப்பூர் வரலாற்றில் எலிசபெத் அரசியாருக்கு ஒரு தனித்துவமான பங்கு இருந்ததாக அமைச்சர் இந்திராணி குறிப்பிட்டார்.
தமது வாழ்நாள் முழுவதும் கடமை, கருணை, ஞானம் போன்ற பண்புகளின் சிகரமாக அரசியார் திகழ்ந்ததாக குமாரி இந்திராணி குறிப்பிட்டார்.
எலிசபெத் அரசியார் மும்முறை சிங்கப்பூருக்கு வருகைபுரிந்தார். அந்தப் பயணங்களின்போது அவருக்குப் பல சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன. அவற்றில், சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட ரோலே புகைப்படக்கருவியையும், தங்கம் மற்றும் வைரத்தினாலான உடுப்பூசியையும் (புரூச்) அரசியார் பலமுறை பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் சார்பில் மன்னர் சார்ல்ஸ், அரச குடும்பத்தினர், பிரிட்டிஷ் மக்கள் ஆகியோருக்கு குமாரி இந்திராணி ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துகொண்டார்.

