'ஒன் பாஸ்' விண்ணப்பங்கள்: மனிதவள அமைச்சர் விளக்கம்
புதிய வெளிநாட்டுக் கட்டமைப்பு, நிபுணத்துவ வேலை அனுமதி அட்டை (ஒன் பாஸ்) தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த ஈரடுக்குப் பாதுகாப்பு அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
அனைத்து 'ஒன் பாஸ்' விண்ணப்பங்களையும் மனிதவள அமைச்சு கவனமாகப் பரிசீலிக்கும் என்று அமைச்சர் டான் கூறினார்.
புதிய 'ஒன் பாஸ்' வேலை அனுமதி அட்டை தொடர்பாக முதன்முதலில் கடந்த மாதம் 29ஆம் தேதி அறிவிப்பு வெளியானது.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் அதன் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர். குறிப்பாக, அந்த வேலை அனுமதி அட்டையைத் தவறாகப் பயன்படுத்துவதை அல்லது மோசடி விண்ணப்பங்களைத் தடுக்கும் திட்டங்கள் குறித்து அவர்கள் விளக்கம் கேட்டிருந்தனர்.
ஒரே நிறுவனத்திடம் இருந்து $30,000 அல்லது அதற்குமேல் மாத ஊதியம் பெறும் வெளிநாட்டுத் திறனாளர்களுக்கு அல்லது கலை மற்றும் கலாசாரம், விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வியியல், ஆராய்ச்சி ஆகிய துறைகளில் தலைசிறந்த சாதனையாளர்களுக்கு 'ஒன் பாஸ்' வழங்கப்படும்.
அவர்களின் வாழ்க்கைத்துணைகளும் ஒப்புதல் கடிதம் பெற்றபின் சிங்கப்பூரில் வேலைசெய்ய அனுமதிக்கப்படுவர்.
"இடம்பெயர்வது குறித்து முடிவெடுக்கும்போது, பொதுவாக அது குடும்பம் சார்ந்த முடிவாக இருக்கும். அதனால், வாழ்க்கைத்துணைக்கும் உறுதிப்பாடு இல்லையெனில், அந்தத் திறனாளர்கள் வேறு நாடுகளைத் தெரிவுசெய்யக்கூடும்," என்றார் திரு டான்.
பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கியபோது, போலிச் சம்பள உறுதிமொழி அளிப்போரைக் கண்டறிவதற்காக ஏற்கெனவே இடம்பெறும் பின்னணிச் சரிபார்ப்பு நடவடிக்கைகள் புதிய 'ஒன் பாஸ்' விண்ணப்பங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், 'ஒன் பாஸ்' அட்டைக்கு மாற விரும்பும் எம்ப்ளாய்மண்ட் பாஸ் அட்டைதாரர்களின் வருமான வரித் தாக்கல்கள் குறித்தும் மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்துடன் இணைந்து ஆய்வுசெய்யும்.
'ஒன் பாஸ்' அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர், குறைந்தது 500 மில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மூலதனம் கொண்ட அல்லது குறைந்தது ஓராண்டாவது, குறைந்தபட்சம் 200 மில்லியன் ஆண்டு வருமானம் ஈட்டிய நிறுவனத்தில் வேலை செய்துவர வேண்டும் அல்லது சிங்கப்பூரில் அத்தகைய நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும்.
'ஒன் பாஸ்' அட்டை வைத்திருப்போர் தங்களது தொழில்சார் நடவடிக்கைகள் குறித்தும் ஆண்டு வருமானம் குறித்தும் ஒவ்வோர் ஆண்டும் மனிதவள அமைச்சுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
அவர்களின் 'ஒன் பாஸ்' புதுப்பித்தலுக்குத் தகுதியானவையா என்பதை மதிப்பிடும்போது, அந்த விவரங்களை அமைச்சு பயன்படுத்திக்கொள்ளும் என்று திரு டான் குறிப்பிட்டார்.
'ஒன் பாஸ்' விண்ணப்பதாரர்கள் வேலையில் நீடிப்பதற்கான கால வரம்பு விதிக்கப்படாது என்றபோதும், அதை ஒரு வருகை அல்லது பயண ஆவணமாகப் பயன்படுத்திகொள்ளலாம் எனத் தவறாகக் கருதலாகாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
எவ்வித சரியான காரணமும் இன்றி, நீண்டகாலமாக செயலற்ற பொருளியல் நிலை நீடித்தால், 'ஒன் பாஸ்' அனுமதியை ரத்து செய்யும் உரிமை தமது அமைச்சுக்கு உண்டு என்றும் அமைச்சர் டான் கூறினார்.
'ஒன் பாஸ்' அட்டைதாரர்கள் பல வழிகளிலும் பங்களிக்க முடியும் என்று அவர் சொன்னார்.
எடுத்துக்காட்டாக, 'ஒன் பாஸ்' அட்டை பெற்று பணியாளர்களாக இருப்பவர்கள் புதிய தொழிற்பிரிவை சிங்கப்பூருக்குக் கொண்டுவரலாம் என்றும் தொழில்முனைவர்கள் இங்கு நிறுவனம் தொடங்கலாம் என்றும் சிலர் உள்ளூர் நிறுவனங்களுக்கும் நிபுணர்களுக்கும் ஆலோசனை வழங்கலாம் என்றும் திரு டான் விளக்கினார்.
"திறமை என்று வரும்போது சிங்கப்பூர் தற்காப்பு ஆட்டத்தைக் கையில் எடுக்க முடியாது," என்றார் அவர்.
'அதிகமான சிங்கப்பூரர்களுக்கு வெளிநாட்டு அனுபவம் தேவை'
அனைத்துலக நிறுவனங்களில் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்க அதிகமான சிங்கப்பூரர்களுக்கு வெளிநாட்டு அனுபவம் தேவை என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் கூறியிருக்கிறார்.
அதற்கு, அவர்களுக்கு ஆதரவு வழங்க நமது அரசாங்க அமைப்புகள் பல நல்ல திட்டங்களைக் கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.
உலகத் திறனாளர்களை ஈர்ப்பதற்கான அரசாங்கத்தின் கொள்கைகளானது, உள்ளூர் திறனாளர் வளத்தைப் பெருக்குவதை விரைவுபடுத்துவதற்குமானது என்று திரு டான் சொன்னார்.
எடுத்துக்காட்டாக, எம்ப்ளாய் மண்ட் பாஸ் விண்ணப்பங்களை மதிப்பிடுவதற்கான 'காம்பஸ்' திட்டத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டார். அத்திட்டம், ஒரு நிறுவனத்தில் இருக்கும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்களில் எத்தனை பேர் உள்ளூர்வாசிகள் என்பதைக் கருத்தில் கொள்கிறது.
வேலை உருமாற்ற வரைவுத் திட்டங்கள், சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் ஆசிய நிதித்துறைத் தலைவர்கள் திட்டம், இவ்வாண்டு வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் போது தாம் அறிவித்த சிங்கப்பூர் அனைத்துலக நிர்வாகிகள் திட்டம் போன்றவற்றையும் அமைச்சர் டான் சுட்டிக்காட்டினார்.
தங்களது தொழில் மீள்திறன், நிலைத்தன்மைக்காக அனுபவமிக்க ஊழியர்களிடம் இருந்து, குறைந்த அனுபவமுள்ள ஊழியர்கள் கற்றுக் கொள்ளும் திட்டங்களை நிறுவனங்கள் ஆர்வத்துடன் செயல் படுத்தி வருவதாகவும் அவர் சொன்னார்.

