தோட்டக்கள் இருந்த துப்பாக்கி ஏந்தியபடி உரிமத்துடன் இயங்கும் கடன் தரும் நிறுவனத்திடமிருந்து திருடிய முன்னாள் 'ஏத்தோஸ்' துணை காவல்துறை அதிகாரிக்கு 16.5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதிகம் கடனோடு இருந்த அவருக்கு 18 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
2016ஆம் ஆண்டு ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியிலிருந்து திருடிய கனடியர் டேவிட் ஜேம்ஸ் ரோச் பயன்படுத்திய உத்தியைத் தானும் உபயோகிக்க முடிவெடுத்ததைக் குற்றவாளியான 39 வயது மஹாடி முகம்மது முக்தார் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதியன்று பிற்பகல் 3.30 மணிக்கு பணிக்காகத் தரப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த மஹாடி, ஜூரோங் கேட்வே சாலையில் புளோக் 135ல் இருந்த 'ஓடி கிரெடிட்' நிறுவனத்தின் கடன் தரும் அதிகாரியிடம் மிரட்டல் குறிப்பைக் கொண்ட தாளைக் கொடுத்து திருடியிருக்கிறார்.
அப்போது சீருடையில் இல்லாத மஹாடி வைத்திருந்த துப்பாக்கியில் ஐந்து தோட்டாக்கள் இருந்தன.
24,800 வெள்ளிக்கும் அதிகமான தொகையைத் திருடிய மஹாடி அதில் ஒரு பங்கைத் தனது நண்பருக்கு அனுப்பினார்.
14,000 வெள்ளியைத் தனது வங்கிக் கணக்கில் போட்டுவைத்தார்.
அதற்குப் பிறகு 'ஏத்தோஸ்' தலைமையகத்திற்குச் சென்று சீருடை மாற்றிக்கொண்டு பணியில் ஈடுபட்டார்.
பின்னர் 11,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை நான்கு கடன் முதலைகளுக்கு அனுப்பினார்.
மிரட்டல் குறிப்பு இருந்த தாளைக் கிழித்து குப்பைத் தொட்டியில் வீசினார்.
ஐந்து மணிநேரத்திற்குள் மஹாடி கைதுசெய்யப்பட்டார்.
சிங்கப்பூரில் 15 ஆண்டுகளில் ஆயுதங்களுடன் மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் செயல் ஒன்றில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

