'பிள்ளைகளுக்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசியைச் சேர்க்க திட்டமில்லை'

'பிள்ளைகளுக்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசியைச் சேர்க்க திட்டமில்லை'

1 mins read
c7cfadee-8188-4d95-a47e-4ca91172610b
கோப்புப் படம்: சாவ்பாவ் -

பிள்ளைகளுக்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசியைச் சேர்த்துக்கொள்ள தற்போதைக்குத் திட்டமில்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமையன்று (13 செப்டம்பர்) நாடாளுமன்றத்தில் இயோ சூ காங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹொன் வெங் எழுப்பிய கேள்விகளுக்குத் திரு ஓங் பதிலளித்தார்.

கொள்ளைநோய்ப் பரவல் சூழல் எந்நேரமும் மாறக்கூடியது என்றும் அதன் தொடர்பில் புதிய தகவல்கள் வரும்போது பரிந்துரைகள் மாறலாம் என்றும் திரு ஓங் குறிப்பிட்டார்.

"தேவைப்படும்போது சுகாதார அமைச்சு இதை மறுபரிசீலனை செய்யும்," என்று அமைச்சர் ஓங் சொன்னார்.

மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்ட 18 வயதுக்கு உட்பட்டோரில் கிருமித்தொற்றுக்கு ஆளான ஒவ்வொரு 100,000 பேரிலும் 5.7 விழுக்காட்டினருக்கு அரிதாகக் காணப்படும் மோசமான ஒவ்வாமை ஏற்பட்டதென்றும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 18 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு 100,000 பேரிலும் 38 பேர் 'எம்ஐஎஸ்-சி' எனும் அந்த ஒவ்வாமைக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த ஒவ்வாமைக்கு ஆளாகும் பிள்ளைக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு பொதுவாக இரண்டிலிருந்து எட்டு வாரங்களுக்குப் பிறகு உடலின் எதிர்ப்பு சக்தி தேவைக்கு அதிகமாகச் செயல்படும்.