தமிழ்நாட்டில் இருந்து குவைத்திற்கு வேலைக்குச் சென்ற ஆடவர் ஒருசில நாள்களிலேயே சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவில் உள்ள லட்சுமண்குடி என்னும் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமரன், 30, (படம்) என்னும் அவர் இம்மாதம் 3ஆம் தேதி ஹைதராபாத் நிறுவனம் ஒன்றின் மூலம் குவைத்துக்கு வேலைதேடிச் சென்றார். இவருக்கு வித்யா என்னும் மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.
துபாய் சென்ற இரு நாள்களில் தமக்கு வேலை பிடிக்கவில்லை என்று தமது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். 6ஆம் தேதிவரை தொடர்பில் இருந்த முத்துக்
குமரனை மறுநாள் தொடர்புகொள்ள இயலவில்லை.
ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக 9ஆம் தேதி (கடந்த வெள்ளிக்கிழமை) தகவல் வந்ததும் அவரது குடும்பத்தினர் துடிதுடித்துப்போனார்கள்.
அலுவலக உதவியாளர் வேலைக்காகப் பணம் கொடுத்து துபாய் சென்ற முத்துக்குமரனுக்கு பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை தரப்பட்டதாகத் தெரிகிறது. அந்த வேலையைச் செய்ய மறுத்ததால் அவருக்கும் அவரது முதலாளிக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்திருக்கிறது.
தொடர்ந்து, குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ள முத்துக்குமரன் முயன்றதால் அவரது முதலாளி சினம் கொண்டதாகவும் அவரை அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாகவும் தெரியவந்தது.
இதற்கிடையே, குவைத்தின் 'ஐமன் மேட் நியூஸ்' என்னும் செய்தித்தாளில் தமிழகத்தைச் சேர்ந்த 30 வயது ஊழியர் ஒருவர் சுடப்பட்டு மாண்டதாகவும் இது தொடர்பாக 24 வயது குவைத் குடிமகன் கைது செய்யப்பட்டதாகவும் செய்தி வெளியானது.
மாண்டது முத்துக்குமரன் என்பதை குவைத்தில் வேலை செய்யும் அவரது உறவுக்காரர் ஒருவர் உறுதிப்படுத்தினார். சம்பவம் தொடர்பாகத் தமக்கு முத்துக்குமரனின் மனைவி மனு தந்துள்ளதாகவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

