மனிதவள அமைச்சின் வேலை நிலவர அறிக்கை
சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 126,100 வேலையிடங்களே காலியாக இருந்தன. தொடர்ந்து ஏழு மாதங்களாக காலியாக இருக்கும் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் முதல்முறையாக இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
வேலையின்மை விகிதம் குறைந்தாலும் வேலை தேடுவோருக்கு வாய்ப்புகள் அதிகமாகவே இருந்தன.
ஆக அதிகமாக, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 128,100 வேலைகள் நிரப்பப்படாமல் இருந்தன. அதற்கு முந்தைய காலாண்டில் 117,100 வேலையிடங்களே காலியாக இருந்தன.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலைதேடுவோருக்கும் காலியிடங்களுக்கும் இடையிலான விகிதம் 2.53 ஆகப் பதிவானது. அதாவது வேலை இல்லாத ஒருவருக்கு இரண்டுக்கும் மேற்பட்ட காலியிடங்கள் காத்திருந்தன. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த எண்ணிக்கை 2.42 மட்டுமே. வேலையற்றோர் எண்ணிக்கை குறைந்திருப்பதை இது காட்டுகிறது.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த வேலைவாய்ப்பு 66,500க்கு உயர்ந்ததாக மனிதவள அமைச்சு அதன் வேலைச் சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய காலாண்டில் பதிவான 42,000 எனும் எண்ணிக்கையைவிட இது கணிசமான அளவு அதிகம். உலகளாவிய நிதி நெருக்கடி நிலவிய 2008ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்குப் பிறகு பதிவான ஆக அதிக எண்ணிக்கை இது.
தற்போது மொத்த வேலைவாய்ப்பு எண்ணிக்கை, கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு முன்னர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் எண்ணிக்கையில் 99.5 விழுக்காட்டை எட்டியிருப்பதாக மனிதவள அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலைவாய்ப்பு பெற்றவர்களில் அதிகமானோர் வெளிநாட்டினர்.
ஏப்ரல் மாதம் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து கட்டுமானம், உற்பத்தி ஆகிய துறைகள் சார்ந்த நிறுவனங்கள் மீண்டும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தொடங்கியது இதற்குக் காரணம்.
இந்த ஆண்டின் முற்பாதியில் 'ஒர்க் பெர்மிட்', 'ஒர்க் பாஸ்' எனும் வேலை அனுமதிச்சீட்டுகள் 80,900 பேருக்கும் 'எஸ் பாஸ்', 'எம்ப்ளாய்மெண்ட் பாஸ்' எனும் வேலை அனுமதி ஏறக்குறைய 14,000 பேருக்கும் வழங்கப்பட்டன.
இருப்பினும் வெளிநாட்டு ஊழியர் எண்ணிக்கை கிருமிப்பரவலுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் 10 விழுக்காடு குறைவு என்று அமைச்சு தெரிவித்தது.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி, புதிய வேலைகளில் சேர்ந்த சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோரின் எண்ணிக்கை, கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு முன்பிருந்ததைவிட 4.2 விழுக்காடு உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் அதிகமானோருக்கு நிதி, காப்பீட்டுச் சேவை, தகவல், தொடர்பு, தொழில்முறைச் சேவைகள் ஆகிய துறைகளில் வேலை கிடைத்தது.
இந்த ஆண்டு ஜூலை மாதம், சிங்கப்பூரின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் மேலும் குறைந்து 2.1 விழுக்காடு ஆனது.
இவ்வேளையில், ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் எண்ணிக்கை 990க்குக் குறைந்தது. அதாவது, 10,000 ஊழியர்களில் ஐந்து பேர் ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக உற்பத்தித் துறையில் ஆட்குறைப்பு எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. உலோகப் பொருள்கள், இயந்திரங்கள், கருவிகள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் மின்னிலக்கப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் அதிகம் ஆட்குறைப்பு செய்யவில்லை.
வர்த்தக நிறுவனங்களின் நிதி மற்றும் செயல்முறையில் ஏற்பட்ட மாற்றமே ஆட்குறைப்பு நடவடிக்கைகள் குறைந்ததற்குக் காரணம் என்று மனிதவள அமைச்சு சொன்னது.
அதேவேளையில் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்புக்கான பொதுவான காரணங்கள், விலைவாசி உயர்வும் குறைவான வர்த்தகமும் என்று அமைச்சு கூறியது.
ஆட்சேர்க்கை விகிதம் இரண்டாம் காலாண்டில் 2.6 விழுக்காட்டிற்கு உயர்ந்தது. இது 2014ஆம் ஆண்டு பதிவான எண்ணிக்கைக்கு ஈடானது.
வேலையிலிருந்து விலகியோர் எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது காலாண்டாக 1.7 விழுக்காடாக நிலையாக இருந்தது.
நீண்டகால வேலையின்மை விகிதம், அதாவது 25 வாரங்கள் அல்லது அதற்குமேல் பணியில் இல்லாதோர் விகிதம், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 0.7 விழுக்காடாகப் பதிவானது.
தங்குமிடம், விமானப் போக்கு வரத்து ஆகிய துறைகளில் ஆட்சேர்ப்பு விகிதம் உயர்ந்ததாக அமைச்சு கூறியது.
அனைத்துலகப் பயணிகளின் வருகையால் சுற்றுப்பயணத் துறை, விமானப் போக்குவரத்துத் துறை ஆகியவை தொடர்ந்து வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

