உக்ரேன்: உக்ரேன் தனது எதிர்த் தாக்குதலைத் தொடரும் வேளையில், ரஷ்யாவிடமிருந்து கூடுதலான ஆக்கிரமிப்புப் பகுதிகளைத் தமது துருப்பினர் மீட்டிருப்பதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி (இடது) கூறியிருக்கிறார்.
இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 8,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை உக்ரேனியப் படையினர் மீட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அடுத்தபடியாக, கியவ் படைகள் உக்ரேனின் கிழக்குப் பகுதி நகரங்களை மீட்பதில் முனைந்துள்ளன. மாஸ்கோ இந்தப் போரில் முதலில் கைப்பற்றிய டோன்பாஸ் வட்டார நகரங்களை விரைந்து மீட்பது உக்ரேனின் அடுத்த இலக்கு.
ரஷ்யத் தரப்பிற்கு இது மிகப் பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கான ஆதரவை இது வெகுவாகக் குறைத்துவிட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெரிகிறது என்கின்றனர் அரசியல் கவனிப்பாளர்கள்.
அதிகம் எதிர்பார்க்கப்படுவதுபோல் உக்ரேன் இதில் வெற்றிபெற்றால் அது திரு புட்டினின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரக்கூடும் என்றும் கருதப்படுகிறது. இந்தத் தோல்வி புட்டினுக்குத் தனிப்பட்ட முறையில் தோல்வி என்பதைக் காட்டிலும் ரஷ்யா முழுவதற்குமான அரசியல் ரீதியான தோல்வியாகவும் பொருளியல் பேரிடராகவும் ரஷ்ய மக்கள் இதனைக் கருதுவர் என்பதை அவர்கள் சுட்டினர்.
உக்ரேனியப் படைகளின் எதிர்த்தாக்குதலும் அவை அடைந்துள்ள வெற்றியும் பிரமிப்பூட்டுவதாகக் கூறுகிறார் ரஷ்ய அதிபரின் நெருங்கிய நண்பரும் செசின்யாவின் தலைவருமான ரம்ஸான் கடிரோவ். ரஷ்ய ராணுவத் தளபதிகளின் செயல்திறனை அவர் வெளிப்படையாகக் குறைகூறியுள்ளார்.
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், மாஸ்கோ என ரஷ்யாவின் ஆக முக்கியமான நகரங்களில் உள்ள உள்ளூர் அரசியல்வாதிகள் சிலர் அதிபர் புட்டின் பதவி விலகவேண்டும் என்று வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்துள்ளனர். திரு புட்டின், நாட்டின் பாதுகாப்பிற்கும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கும் கேடு விளைவிப்பதாக அவர்கள் சாடுகின்றனர். ரஷ்ய அரசியலமைப்புச் சட்டத்தின் 93ஆம் விதியின்கீழ் தேசத்துரோகக் குற்றத்திற்காக அதிபரைப் பதவியில் இருந்து நீக்க முடியும் என்பதையும் அவர்கள் சுட்டியுள்ளனர்.
இருப்பினும் இதனாலெல்லாம் அதிபர் புட்டின் அடியோடு தூக்கியெறியப்படுவாரா என்பது சந்தேகமே. பொறுப்பேற்ற 20 ஆண்டுகளில் இதற்கு முன்னர் சிலமுறை பதவியைத் துறக்க நேரிட்டபோதும் அவர் முன்னிலும் வலுவுடன் மீண்டு வந்தவர் என்பதை மறுப்பதற்கில்லை என்கின்றனர் கவனிப்பாளர்கள்.

