மலேசியாவின் முன்னாள் அமைச்சர் திரு சாமிவேலு காலமானார்

மலேசியாவின் முன்னாள் அமைச்சர் திரு சாமிவேலு காலமானார்

2 mins read
5886e5ac-985a-4418-b224-75743d35a1b4
படம்: லீடர்ஸ் ஆன்லைன் -

மலேசியாவின் முன்னாள் அமைச்சரும் மஇக எனப்படும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான திரு எஸ் சாமிவேலு இன்று(செப்டம்பர் 15) காலமானார். அவருக்கு வயது 86.

கோலாலம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் அவரது உயிர் பிரிந்தது என அறியப்படுகிறது.

முன்னாள் சுகாதார அமைச்சரும் மஇக-வின் முன்னாள் தலைவருமான திரு எஸ்.சுப்ரமணியம் இத்தகவலை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மார்ச் 8, 1936ஆம் ஆண்டு பிறந்த திரு சாமிவேலு 1979ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் மஇக-வின் தலைவராகப் பதவி வகித்திருந்தார். மேலும் மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் பல அமைச்சுகளுக்குப் பொறுப்பு வகித்து ஆக அதிக காலம் அமைச்சராக இருந்தவர் திரு சாமிவேலு.

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக 1974 முதல் 2008 வரை பொறுப்பு வகித்தார். அவர் அரசியலிலிருந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

திரு சாமிவேலுவின் நல்லுடல் அவரது இல்லத்தில் வைக்கப்படும். அவருக்கு அஞ்சலி செலுத்த விரும்புவோர் எண்19, லெங்கொங்கான் வேதவனம், பத்து 3 1/2 ஜாலான் ஈப்போ, கோலாலம்பூர் 51100 (No. 19, Lengkongan Vethavanam, Batu 3 1/2, Jalan Ipoh, 51100 Kuala Lumpur) எனும் முகவரியில் இன்று பிற்பகல் 2 மணி முதல் செல்லலாம்.

நாளை (செப்டம்பர் 16) திரு சாமிவேலுவின் நல்லுடல் அவரது இல்லத்திலிருந்து பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு டிபிகேஎல் (DBKL) எரியூட்டு மண்டபத்துக்குக் கொண்டு செல்லப்படும்.