உலக நிறுவனம்: கொரோனா ஒழிகிறது; அறிகுறி தெரிகிறது

உலக நிறுவனம்: கொரோனா ஒழிகிறது; அறிகுறி தெரிகிறது

3 mins read

உல­கைப் பிடித்து ஆட்டி வந்த கொரோனா தொற்று முடி­கிறது. இதற்­கான அறி­குறி தெரி­கிறது என்று உலக சுகா­தார நிறு­வனத்­தின் தலை­வர் தெரி­வித்துள்ளார்.

கொவிட்-19 உல­கம் முழு­வ­தும் ஆறு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட மக்­களைக் கொன்று குவித்து இருக்­கிறது.

அந்­தத் தொற்­றில் இருந்து இன்­ன­மும் நாம் விடு­ப­ட­வில்லை என்­றா­லும் அதற்­கான அறி­குறி தெரி­கிறது என்று மெய்நிகர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அந்த உலக நிறு­வ­னத்­தின் தலைமை இயக்­கு­நர் டெட்­ரோஸ் அதா­னம் தெரி­வித்­தார்.

இருந்­தா­லும் இப்போதைய நல்ல வாய்ப்பை நன்கு பயன்­ப­டுத்­திக்கொள்ள உல­கம் முயற்­சிகளை தொடர வேண்டிய தேவை உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

"நெடுந்­தொ­லைவு ஓட்­டத்­தில் வெற்­றிக் கோடு தெரி­கிறது. இந்த நேரத்­தில் வேகத்தை குறைத்­து­வி­டக்கூடாது. கூடு­மா­ன­வ­ரை­ முயல வேண்­டும். வெற்றி கிட்டி வரு­கிறது. இப்­போது ஓட்­டத்தை நிறுத்­தி­விட்­டால் விளைவு மோச­மா­கி­விடும்," என்று அவர் எச்­ச­ரித்து இருக்­கி­றார்.

இந்த வாய்ப்பை நழு­வ­விட்­டு­விட்­டால் அந்­தக் கிருமி மேலும் மேலும் உரு­மாறி மேலும் மர­ணங்­களை, தொல்­லை­களை, நிச்­ச­ய­மில்­லாத நிலை­களை ஏற்­ப­டுத்­தி­விடும் வாய்ப்பு இருக்­கிறது என்றாரவர்.

உல­கத்தை கொவிட்-19 கிருமி பிடித்து­விட்­டது என்று 2020 ஜன­வரி மாதம் அனைத்­து­லக அவ­சர நிலையை ஐநா அமைப்பு பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யது. அதற்­குப் பிறகு இப்­போ­து­தான் நம்­பிக்­கை­மிக்க அறி­விப்பு வெளி­யாகி இருக்­கிறது.

கொரோனா கிருமி 2019 பிற்­ப­கு­தி­யில் சீனா­வில் தலை­காட்­டி­யது. உல­கம் எங்கும் பரவி ஏறக்­கு­றைய 6.5 மில்­லி­யன் மக்­களைக் கொன்று இருக்­கிறது. 606 மில்லி­யன் மக்­கள் அந்­தத் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­னர்.

உல­கப் பொரு­ளி­யலே முடங்­கி­யது. சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஏற்­பா­டு­க­ளுக்குப் பெரும் நெருக்­கடி ஏற்­பட்­டது.

தடுப்­பூ­சி­கள், இதர சிகிச்­சை­கள் கார­ண­மாக மர­ணங்­கள் குறைந்தன. மருத்துவ­ ம­னை­களில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய தேவை படிப்­ப­டி­யா­கக் குறைந்தது.

2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு கொவிட்-19 கார­ண­மாக ஏற்­பட்ட மர­ணம் சென்ற வாரம் மிகக் குறைந்த அள­வுக்கு இருந்­ததாக ஐநா தெரி­வித்து உள்­ளது.

இருந்­தா­லும் முழு விழிப்­பு­நி­லை­யில் இருந்து வரும்­படி திரு டெட்­ரோஸ் உலக நாடு­களை மறு­ப­டி­யும் வலி­யு­றுத்­திக் கேட்டுக்­கொண்­டார்.

கொள்­கை­களை மீண்டும் ஆராய்ந்து அவற்­றைப் பலப்­ப­டுத்தி கொவிட்-19 கிருமி­யும் இதர வகை கிரு­மி­யும் எதிர்­கா­லத்­தில் தலை­காட்­டா­மல் தடுத்­துக்­கொள்­ளும் வகையில் நாடு­கள் செயல்­பட வேண்டி இருக்­கிறது என்­றார் அவர்.

எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய மக்­கள் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போடும்­ப­டி­யும் கொவிட்-19 பரி­சோ­த­னை­களை இடை­விடா­மல் தொட­ரும்படி­யும் வலி­யு­றுத்­திய அவர், மருத்­துவக் கரு­வி­கள், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை ஊழி­யர்­கள் போதிய அள­வில் இருப்­பதை எப்­போ­துமே உலக நாடு­கள் உறு­திப்­ப­டுத்தி வர­வேண்­டும் என்­றும் கூறினார்.

இத­னி­டையே, எதிர்­கா­லத்­தில் கிரு­மித்­தொற்று உல­கம் முழு­வ­தும் வெவ்­வே­றான கால­கட்­டத்­தில் தலை­காட்­டக்­கூ­டிய வாய்ப்பு இருக்­கிறது என்று உலக சுகா­தார நிறு வனத்­தின் மூத்த தொற்­று­நோய் துறை வல்­லு­நர் மரியா வேன் கெர்­கோவ் எச்சரித்தார்.

"இந்த ஆண்­டில் மட்­டும் ஒரு மில்­லியன் பேர் மர­ணம் அடைந்துள்ளனர். ஆகை­யால், கொரோனா கிருமி உல­க­ள­வி­லும் பெரும்­பா­லான நாடு­க­ளி­லும் அவ­ச­ர­நி­லை­யி­லேயே இன்னமும் இருந்து வரு­கிறது," என்று அவர் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, அக்­டோ­ப­ரில் இந்த உலக நிறு­வ­னத்­தின் அடுத்த வல்­லு­நர்­கள் கூட்டம் நடக்­கும் என்­றும் கொவிட்-19 அனைத்­து­லக அள­வில் இன்­ன­மும் கவலை தரும் ஒன்­றாக இருக்­குமா என்­பது பற்றி அப்­போது முடிவு செய்­யப்­படும் என்­றும் அந்த அமைப்­பின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறினார்.

கொவிட்-19 முடி­வுக்­கான அறி­குறி தலை­காட்டி இருப்­ப­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் அறி­வித்து இருப்­பதை சீனா­வில் பல­ரும் அவ­நம்­பிக்­கை­யு­டன் வர­வேற்று இருக்­கி­றார்­கள். அந்த அறி­விப்பை எள்ளி நகை­யா­டி­யும் இருக்­கி­றார்­கள். சீனா­வில் இன்­ன­மும் மில்­லி­யன் கணக்­கான மக்­கள் கொரோனா கிருமி கார­ண­மாக முடங்­கிய நிலை­யி­லேயே இருந்து வரு­கி­றார்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அந்­தக் கிரு­மியை அறவே துடைத்­தொ­ழிக்க வேண்­டும் என்­பதே சீனா­வின் கொள்கையாக உள்ளது. கொரோனாவுடன் வாழ சீனா தயாராக இல்லை.