மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மலேசியாவில் ஆகஅதிக காலம் பதவி வகித்துள்ள அமைச்சர்களில் ஒருவருமான எஸ் சாமிவேலு தமது 86வது வயதில் காலமானார்.
அந்தக் கட்சியின் முன்னாள் தலைவரான எஸ் சுப்ரமணியம் நேற்று ஃபேஸ்புக்கில் இதனை தெரிவித்தார்.
திரு சாமிவேலுவின் புதல்வரான வேள்பாரி தம்மிடம் அத்தகவலைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
"எங்களில் பலருக்கும் திரு சாமிவேலுதான் மதியுரைஞர். நாட்டிற்கும் இந்தியச் சமூகத்திற்கும் அவர் ஆற்றி இருக்கும் சேவை நம் நினைவை விட்டு அகலாமல் என்றும் இருந்து வரும்," என்று திரு சுப்ரமணியம் கூறினார்.
திரு சாமிவேலு முழுமையான புகழ் மிக்க வாழ்வை வாழ்ந்தவர். மிகுந்த மரியாதையுடன் அவர் போற்றிப் புகழப்படுவார் என்று மேலும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரு சாமிவேலுவின் குடும்பத்தாருக்கு அவர் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இதனிடையே, திரு சாமிவேலுவின் மறைவு சமூகத்திற்கும் நாட்டிற்கும் பேரிழப்பு என்று மலேசிய சீனர் சங்கத்தின் தலைவர் வீ கா சியோங் தெரிவித்தார்.
மலேசிய இந்தியர் காங்கிரஸ் தலைவராகவும் அமைச்சராகவும் அவர் ஆற்றிய சேவைகள் எப்போதுமே நினைவுகூரப்படும் என ஃபேஸ்புக்கில் அவர் கூறினார்.
பாரிசான் நேஷனல் கூட்டணியின் முக்கியமான ஓர் அங்கமாக இருந்த மலேசிய இந்தியர் காங்கிரஸின் தலைவராக 2010ஆம் ஆண்டுவரை 31 ஆண்டுகாலம் பதவி வகித்து திரு சாமிவேலு சாதனை படைத்தவர்.
மலேசிய இந்தியர் காங்கிரஸில் 1959ஆம் ஆண்டில் சேர்ந்த அவர், பல பத்தாண்டு காலமாக மலேசிய இந்தியர் அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
மலேசியாவின் பிரதமராக 2003ஆம் ஆண்டுவரை 22 ஆண்டுகள் பதவி வகித்த மகாதீர் முகம்மதின் முக்கியமான விசுவாசியாக திரு சாமிவேலு இருந்துவந்தார்.
திரு சாமிவேலு நீண்டகாலம் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றியவர். எரிசக்தி, தொடர்பு, அஞ்சல் துறை அமைச்சராகவும் அவர் மொத்தம் 29 ஆண்டுகள் அமைச்சர் பதவி வகித்தவர். திரு சாமிவேலு 2008 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்தார்.
தன் தந்தையான திரு சாமிவேலு, நினைவாற்றல் இழப்பு குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்றும் ஆகையால் தன் விவகாரங்களைக் கையாளக்கூடிய மனநிலையில் அவர் இல்லை என்றும் 2019 ஆம் ஆண்டில் திரு வேள்பாரி தெரிவித்து இருந்தார்.
மேலும் செய்தி பக்கம் 8ல்


