சாங்கி விமானநிலையத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டுச் செல்லும் பயணிகள் நவம்பர் 1ஆம் தேதி முதல் அதிக விமானக் கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும்.
சாங்கி விமானநிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களில் செல்லும் பயணிகள் புறப்பாட்டுக் கட்டணமாக இப்போது $52.30 செலுத்துகிறார்கள்.
இதில் $35.40 தொகையைப் பயணிகள் சேவை மற்றும் பாதுகாப்புக் கட்டணமாக சாங்கி விமானநிலையக் குழுமம் வசூ லிக்கிறது.
விமானநிலைய மேம்பாட்டுத் தீர்வையாக $10.80 தொகையையும் விமானப் போக்குவரத்துத் தீர்வையாக $6.10 தொகையையும் அரசாங்கம் வசூலிக்கிறது. இந்தக் கட்டணம் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் உயரும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மொத்த புறப்பாட்டுக் கட்டணம் $6.90 அதிகரித்து $59.20 ஆக இருக்கும். அதேபோல, இந்தக் கட்டணம் 2023 ஏப்ரலில் $3 கூடி $62.20 ஆகவும் 2024 ஏப்ரலில் மேலும் $3 கூடி $65.20 ஆகவும் உயரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த அனைத்துலக விமானப் பயணத் துறை தொடர்ந்து மீட்சி கண்டு வருகிறது. இந்தச் சூழலில் கட்டணம் உயருகிறது.
நவம்பர் 1ஆம் தேதிக்கு முன்னதாக கொடுக்கப்பட்டு இருக்கும் பயணச் சீட்டுகளை வைத்துள்ள பயணிகள் அதிக கட்டணத்தையும் தீர்வைகளையும் செலுத்த வேண்டிய தேவை இல்லை என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்கு வரத்து ஆணையமும் சாங்கி விமானநிலையக் குழுமமும் கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இடைவழிப் பயணிகளுக்கான புறப்பாட்டுக் கட்டணம் மாறாது. இவர்கள் ஒவ்வொரு விமானப் பயணத்திற்கும் விமானநிலையக் கட்டணமாக $9 தொகையைத் தொடர்ந்து செலுத்துவர்.
இதனிடையே, விமானங்களை நிறுத்தி வைப்பதற்கும் தரையிறங்குவதற்கும் விமான நிறுவனங்களும் அதிகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும் என்று இந்த இரண்டு அமைப்புகளும் தெரிவித்தன.
வசூலிக்கப்படும் கட்டணங்களும் தீர்வையும் சாங்கி விமானநிலையக் குழுமத்தின் செயல்முறைகளுக்கு ஆகும் செலவை ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும். விமான முனையங்களை மேம்படுத்தவும் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் அந்தத் தொகை செலவிடப்படும்.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் ஒழுங்குமுறை செயல்களுக்கும் விமானப் பயண மைய உருவாக்கத்திற்கும் அதில் ஒரு பகுதி செலவிடப்படும் என்று கூட்டறிக்கை தெரிவித்தது.
கொவிட்-19க்குப் பிறகு உலக விமானநிலைய மையம் என்ற சிங்கப்பூரின் நிலையை மறுபடியும் பலப்படுத்துவதற்கு இந்த ஆணையம் பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இதன் காரணமாக செலவினங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உருவாகி வரும் சாங்கி விமானநிலையம் முனையம் 5ன் பணிகள் இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் தொடங்கி இருக்கின்றன.
அந்தப் பிரம்மாண்ட முனையம் 2030 நடுப்பகுதியில் கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அது ஆண்டுக்கு 50 மில்லியன் பயணிகளுக்குச் சேவையாற்றும்.
இது முனையம் 1 மற்றும் முனையம் 3 இரண்டும் கையாளும் மொத்த பயணிகளின் எண்ணிக்கையைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சாங்கி விமானநிலையக் கட்டணங்கள் இதற்கு முன் 2018ல் திருத்தப்பட்டன. பயணிகள் சேவை, பாதுகாப்புக் கட்டணம் 2024 வரை ஆண்டுக்கு $2.50 என்ற விகிதத்தில் கூடும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2020ல் அந்தக் கட்டணம் $35.40லிருந்து சென்ற ஆண்டு $37.90 ஆகவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் $40.40 ஆகவும் ஆகியிருக்க வேண்டும். ஆனால், கொவிட்-19 தொற்று காரணமாக 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் அதிகரிப்பு இல்லை.
அந்தக் கட்டணம் திட்டமிட்டபடி நவம்பர் 1 முதல் $40.40 ஆக அதிகரிக்கும். பிறகு மீண்டும் கூடும் என்று இந்த இரண்டு அமைப்புகளும் தெரிவித்து இருக்கின்றன.
ஆணையம் வசூலிக்கும் விமானப் போக்குவரத்துத் தீர்வை 2009ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அது முதல் அந்தத் தீர்வை முதன்முதலாக இப்போதுதான் உயர்த்தப்படுகிறது. இப்போது $6.10 ஆக இருக்கும் அந்தத் தீர்வை நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து $8 ஆகும்.
சாங்கி விமானநிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களில் செல்லும் பயணிகளுக்கு மட்டும்தான் இந்தக் கட்டணம் பொருந்தும். இது 2023, 2024ஆம் ஆண்டுகளில் $8 ஆகவே இருந்து வரும்.
கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த சாங்கி விமானநிலைய முனையம் 4ல் செவ்வாய்க்கிழமை விமானச் சேவை தொடங்கியது.
இந்த முனையம் ஆண்டுக்கு 16 மில்லியன் பயணிகளைக் கையாளும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சாங்கியில் இருந்து புறப்பட்டுச் செல்லும் பயணிகள் செலுத்த வேண்டும்

