வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றத்தின் அரையாண்டு அறிக்கை
சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் பாதியில் வேலை இடங்களில் நிகழ்ந்த மரணங்கள், கடும் காயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரை கட்டுமானத் துறை முதலிடம் வகிக்கிறது.
அந்தத் துறையைச் சேர்ந்த வேலை இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் பத்து பேர் மாண்டுவிட்டனர். கட்டுமான வேலை இடங்களில் கடும் காயம் விளைவித்த 84 விபத்துகள் நிகழ்ந்தன.
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை வேலையிடங்களில் 28 மரணங்கள் ஏற்பட்டன. இதுவே கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஏற்பட்ட மரண எண்ணிக்கை 23 ஆகும்.
மனிதவள அமைச்சும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றமும் நேற்று வேலையிடப் பாதுகாப்பு பற்றிய அரையாண்டு புள்ளிவிவரங்களை வெளியிட்டன. கட்டுமானத்துறையில் அமலாக்க நடவடிக்கைகளை மனிதவள அமைச்சு முடுக்கி விட்டுள்ளதாக அறிக்கை கூறியது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் நடுப்பகுதி வரையிலான காலகட்டத்தில் கட்டுமானத்துறையைச் சேர்ந்த வேலை இடங்களுக்கு 63 வேலை நிறுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
அவற்றில் ஊழியருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பாதுகாப்பு இல்லாத நிலவரங்களும் நடைமுறைகளும் காணப்பட்டன.
வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிறுவனங்கள், வெளி தணிக்கை அதிகாரிகளை நியமித்து தங்கள் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார நிர்வாக முறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைபாடுகளைச் சரி செய்த பிறகே வேலை நிறுத்த உத்தரவு மீட்டுக்கொள்ளப்படும்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டில் வேலை இட மரணங்கள் அதிகரித்ததையடுத்து வேலையிடப் பாதுகாப்பு முக்கிய அம்சமாகி இருக்கிறது.
கிராப் விநியோக வாகன ஓட்டுநர் ஒருவர், வேலையிடத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி மாண்டார். அதையடுத்து இந்த ஆண்டில் இதுவரை வேலையிடத்தில் மாண்டோர் எண்ணிக்கை 37 ஆனது.
சென்ற ஆண்டு முழுவதிலும் பதிவான எண்ணிக்கையைவிட இது அதிகம். வேலை இடங்களில் உயரத்திலிருந்து கீழே விழுவது, வாகனங்கள் தொடர்பான விபத்துகளில் சிக்குவது ஆகியவை மரணங்களுக்கு முக்கியக் காரணங்கள்.
கொவிட்-19 கிருமிப்பரவலால் கட்டுமானத்துறை ஆள் பற்றாக்குறையைச் சந்தித்ததை தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் உதவித் தலைமைச் செயலாளர் மெல்வின் யோங் சுட்டினார். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து கட்டுமான நிறுவனங்கள் கூடுதலான வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்தத் தொடங்கியுள்ளன. புதிய ஊழியர்கள் வேலைக்குப் பழக நேரம் தேவை என்பதாலும், தேங்கிக் கிடந்த வேலைகளை முடிக்கும் அவசரத்தில் செயல்பட்டதாலும் வேலையிட விபத்துகள் அதிகரித்திருக்கக்கூடும் என்றார் அவர்.
கிருமிப்பரவலுக்குப் பிந்திய பொருளியல் மீட்சி நிலையில், இத்தகைய போக்கு உலகின் மற்ற நாடுகளிலும் பதிவாகியிருப்பதை வல்லுநர்கள் சுட்டினர். ஊழியர்களிடம் பாதுகாப்பை வலியுறுத்தவும் அபாய மதிப்பீடு, சோதனைகளில் பங்குகொள்ள வைக்கவும் மேலாளர்கள் பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்றனர் அவர்கள்.
இவ்வாண்டு போக்குவரத்து, சேமிப்புக்கிடங்கு சார்ந்த வேலையிடங்களில் ஐவரும் உற்பத்தித்துறையில் நால்வரும் கடல்துறையில் நால்வரும் பலியாயினர்.
இதனிடையே, வேலை இடங்களில் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட சம்பவங்கள் குறைந்து உள்ளன. இந்த ஆண்டின் முதல் பாதியில் இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை 10,401. இது சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் 11,248 ஆக இருந்தது.
வேலையிடப் பாதுகாப்பை மேம்படுத்த இம்மாதத் தொடக்கத்தில் மனிதவள அமைச்சு புதிய பல நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

