துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் ஐந்து நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு இன்று இந்தியா செல்கிறார். சிங்கப்பூரின் துணைப் பிரதமராக அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரத்துவ இந்தியப் பயணம் இது.
புதுடெல்லியில் நடைபெறும் முதல் இந்திய-சிங்கப்பூர் அமைச்சர்நிலை வட்டமேசை மாநாட்டில் அவர் கலந்துகொள்கிறார்.
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் கூட்டு முயற்சிகளில் இரு நாடுகளுக்குமான புதிய வாய்ப்புகளை அடையாளம் காண்பதும் மாநாட்டின் நோக்கம் என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
திரு வோங்குடன் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங், போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக உறவு களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான எஸ். ஈஸ்வரன் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.
இந்தியா சார்பில் அந்நாட்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வர்த்தகம், தொழில், உணவு, பொது விநியோகம் போன்றவற்றுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரான பியுஷ் கோயல் ஆகியோர் கலந்துகொள்வர்.
புதிய அமைச்சர்நிலை மாநாட்டில் மின்னிலக்கப் பொருளியல், நிதி, திறன் மேம்பாடு, நீடித்த நிலைத்தன்மை ஆகிய அம்சங்கள் குறித்து முக்கியமான கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
துணைப் பிரதமர் வோங் நாளை இந்தியாவின் குஜராத் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொள்வார். அம்மாநில முதல்வர் பூபேந்திரபாய் பட்டேலைச் சந்திப்பதுடன் குஜராத் அனைத்துலக நிதித் தொழில்நுட்ப நகரத்தையும் அவர் பார்வை இடுவார்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே வலுவான, விரிவான பொருளியல் உறவுகள் நிலவிவருகின்றன. சென்ற ஆண்டுக்கான இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 26.8 பில்லியன் வெள்ளி.
பொருளியல், நிதித்துறை ஒத்துழைப்பு ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கியத்துவம் பெறுகின்றன.
இரு நாட்டிலும் கட்டண முறைகளை இணைப்பது தொடர்பான முயற்சி சென்ற ஆண்டு தொடங்கப்பட்டது. வரும் நவம்பர் மாதம் அந்தப் பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் நடப்புக்கு வரும்போது சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு கைத்தொலைபேசி எண்களைக் கொண்டு பணம் அனுப்ப இயலும்.
ஆசியான் நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் தொடங்கி இந்த ஆண்டுடன் 30 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன. தற்போது இதன் ஒருங்கிணைப்பாளராக சிங்கப்பூர் செயல்படுகிறது.
மேலும், விரைவில் ஜி-20 நாடுகளின் குழுவிற்குப் பொறுப்பேற்க இருக்கும் இந்தியா, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதுடெல்லியில் நடைபெறவிருக்கும் ஜி-20 தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள சிங்கப்பூருக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது.
கொவிட்-19 சூழலிலும் இந்தியாவில் ஆக அதிக நேரடி முதலீடு செய்த நாடாக சிங்கப்பூர் விளங்கியது. அப்போது சிங்கப்பூர் இந்தியாவில் செய்த நேரடி முதலீட்டின் மதிப்பு 17.42 பில்லியன் அமெரிக்க டாலர்.
இரு தரப்பையும் சேர்ந்த பல நிறுவனங்கள் இரு நாட்டிலும் பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகின்றன.
இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே கலாசார ரீதியாக நெருங்கிய தொடர்பு பல நூறு ஆண்டு களாகவே இருந்து வந்துள்ளது.

