உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் தீ; 115 பேர் வெளியேற்றப்பட்டனர்

உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் தீ; 115 பேர் வெளியேற்றப்பட்டனர்

2 mins read
6a5de95f-c440-40c1-a4b4-cdba608f4a19
தீயை அணைக்கும் பணியில் ஏறக்குறைய 70 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.  படம்: ஃபேஸ்புக்/சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை -
multi-img1 of 5
Google News Preferred Icon

உட்லண்ட்சில் உள்ள தொழிற்பேட்டை ஒன்றில் நேற்றுக் காலை ஏற்பட்ட தீயை அணைக்க தீ அணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் எடுத்துக்கொண்டனர். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தீயணைப்பு வீரர் ஒருவருக்குக் கையில் காயம் ஏற்பட்டது. அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

எண் 66 உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் நிகழ்ந்த தீச்சம்பவம் பற்றி நேற்றுக் காலை 8.40 மணியளவில் தனக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. ஏறத்தாழ 100 மீட்டர் நீளம், 100 மீட்டர் அகலம், எட்டு மீட்டர் உயரம் அளவுக்கு மலைபோல் குவிக்கப்பட்டு இருந்த மறுசுழற்சி கழிவுப்பொருள்கள் தீப்பிடித்து எரிந்தன.

குடிமைத் தற்காப்புப் படையினர் அங்கு செல்வதற்கு முன்பே ஏறக்குறைய 25 ஊழியர்கள் சம்பவ இடத்தில் இருந்து வெளியேறிவிட்டனர். முன்னெச்சரிக்கையாக அக்கம்பக்கத்து இடங்களில் இருந்து ஏறத்தாழ 90 பேர் வெளியேற்றப்பட்டனர்.

பத்து அவசர வாகனங்கள் சம்பவ இடத்தில் காணப்பட்டன. ஏறத்தாழ 70 தீயணைப்பாளர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொழிற்பேட்டைக்கு எதிரே வசிக்கும் திருவாட்டி வாணி பன்னீர்செல்வம், 44, நேற்றுக் காலை சமையல் செய்துகொண்டு இருந்தபோது சன்னலுக்கு வெளியே கரும்புகையை தாம் கண்டதாகச் சொன்னார்.

பொதுத் தாழ்வாரத்துக்குச் சென்ற அவர், தொழிற்பேட்டையில் இருந்து கறும்புகை வெளியேறுவதைக் கண்டு குடிமைத் தற்காப்புப் படையை அழைத்தார்.

அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு குடியிருப்பாளரான திருவாட்டி புவா, தாம் காலை உணவு சமைக்கவிருந்தபோது சன்னலுக்கு வெளியே கறும்புகை தெரிந்ததாகச் சொன்னார். "இப்பகுதியில் தங்குவிடுதிகளும் கட்டுமானத் தளங்களும் இருப்பதால், தீவிபத்து நிகழ்ந்த இடத்தைச் சுற்றி வெளிநாட்டு ஊழியர்கள் பலர் திரண்டனர்," என்றார் அவர்.