புதுடெல்லியில் இந்தியா-சிங்கப்பூர் முதலாவது அமைச்சர்நிலை சந்திப்பு
இந்தியாவின் சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வர்த்தக தொழில் அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோரும் சிங்கப்பூரின் சார்பில் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங், போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான எஸ்.ஈஸ்வரன் ஆகியோரும் முதலாவது வட்டமேசை கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டனர்.
இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே வளர்ந்து வரும் எதிர்கால அம்சங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாட்டு அமைச்சர்களும் வலியுறுத்தினர் என்று இந்திய நிதி அமைச்சு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது.
புதுடெல்லியில் நடந்த இந்தக் கூட்டம் பற்றி தமது ஃபேஸ்புக்கில் கருத்துரைத்த துணைப் பிரதமர் வோங், ஜி20 தலைவர்கள் உச்சநிலைக் கூட்டத்திற்கு, அடுத்த ஆண்டு ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, சிங்கப்பூருக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். அடுத்த சில நாட்களில் பற்பல அம்சங்களில் பயனுள்ள விவாதங்களில் ஈடுபட தாம் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்திய மீட்சிக் காலத்திலும் மாறிவரும் புவிசார் அரசியல் சூழலிலும் தொடரும் விநியோகத் தொடர் இடையூறுகளுக்கு இடையே இருநாடுகளுக்குப் பயன் அளிக்கும் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த இருதரப்பும் உடன்பட்டன. இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பரஸ்பர நன்மையளிக்கும் 57 ஆண்டுகால அரசதந்திர உறவை இருநாட்டு அமைச்சர்களும் மறுவுறுதிப்படுத்தினர். இரு நாடுகளுக்கும் இடையே வலுவாக வேரூன்றி இருக்கும் உத்திபூர்வ நம்பிக்கையின் அடித்தளத்தில், உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, மின்னிலக்கமயமாதல், பசுமைத் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு போன்ற பல்வேறு அம்சங்கள் தொடர்பில் இருநாட்டு அமைச்சர்களும் விவாதித்தனர்.
துணைப் பிரதமர் வோங் ஐந்து நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு இந்தியா சென்று உள்ளார். சிங்கப்பூரின் துணைப் பிரதமராக அவர் மேற்கொள்ளும் முதல் அதிகாரத்துவ இந்தியப் பயணம் இது. இன்று அவர் குஜராத் செல்கிறார். அங்கு அவர் தலைமையிலான அமைச்சர் குழு, முதலமைச்சர் பூப்பேந்திர பாய் பட்டேலுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் குஜராத் அனைத்துலக நிதி நகரத்தையும் பார்வையிடும்.

