சிங்கப்பூரும் இந்தியாவும் மின்னிலக்கப் பொருளியல் துறையில் ஒத்துழைக்கும் பொருட்டு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் இந்தியாவின் அனைத்துலக நிதிச் சேவை நிலைய ஆணையமும் அது குறித்த உடன்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 18) அன்றுகையெழுத்திட்டுள்ளன.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மேற்கொண்டுள்ள அதிகாரத்துவ பயணத்தின்போது, அந்த உடன்பாடு கையெழுத்தானது.
கூட்டு விதிமுறைகளின்கீழ் சிங்கப்பூர், இந்திய சந்தைகளுக்கு, நிதித் தொழில்நுட்பத் துறையில் உள்ள புதிய நிறுவனங்கள் நிதித் துறை சார்ந்த புத்தாக்கப் பொருள்களையும் சேவைகளையும் பரிசோதித்து வழங்க அந்த உடன்பாடு வகை செய்கிறது.
இந்த உடன்பாடு புது முதலீடுகளையும் வேலைகளையும் ஊக்குவிக்கும் என்றும் சிங்கப்பூர், குஜராத் ஆகியவற்றில் உள்ள நிதித் தொழில்நுட்பத் துறைகள் மேம்பட உதவும் என்றும் திரு வோங் நம்பிக்கை தெரிவித்தார்.
திரு வோங் ஞாயிற்றுக்கிழமை குஜராத் முதலமைச்சர் பூப்பேந்திர பட்டேலைச் சந்தித்தார்.
சிங்கப்பூர், குஜராத்தின் இரண்டாவது ஆகப் பெரிய முதலீட்டு நாடு என்றும் இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரும் ஏற்றுமதியில் குஜராத் 30 விழுக்காட்டுப் பங்கை வகிக்கிறது என்றும் திரு வோங் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூருக்கும் குஜராத்துக்கும் அணுக்கமான, பரந்துபட்ட உறவுள்ளதாகவும் துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவின் தேசிய பங்குச் சந்தையும் சிங்கப்பூர் பங்குச் சந்தையும் நல்ல பங்காளிகள் என்ற அவர், இரு நாட்டு முதலீட்டுச் சந்தைகளிடையே தடையற்ற ஒப்பந்த பரிவர்த்தனைகளைச் செய்ய ஏதுவான ஒத்துழைப்புத் திட்டம் இவ்வாண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
குஜராத்தில் உள்ள அனைத்துலக நிதிச் சேவைகள் மையமான கிஃப்ட் சிட்டியின் வழி இருநாட்டு நிதித் துறை ஒத்துழைப்பு மேலும் நெருக்கமாகும் என்று திரு வோங் கூறினார்.


