அதிபயங்கர புயல்: ஜப்பான் தென்கோடி தீவு சிக்கியது

அதிபயங்கர புயல்: ஜப்பான் தென்கோடி தீவு சிக்கியது

2 mins read

ஜப்­பா­னின் தென்­கோடி பிர­தான தீவான கியூ­ஷுவை நேற்று நன்­மா­டோல் என்ற புயல் நிலை­கு­லை­யச் செய்­து­விட்­டது.

அந்­தப் புயலை அதி­ப­யங்­கர புயல் என்று அமெ­ரிக்க கடற்­படை வகைப்­ப­டுத்தி இருக்­கிறது. கியூஷு தீவில் பேய்­மழை பெய்து வரு­கிறது. ஆற்று­ நீர் உடைப்­பெ­டுத்து வெள்ளம் பாயும், நிலச்­ச­ரிவு ஏற்­படும் என்று ஜப்­பானிய வானிலை ஆய்வு நிலை­யம் எச்­சரித்து இருக்­கிறது.

கியூஷு தீவில் நேற்று 500 மி.மீ. மழை பெய்­யும் என்­றும் 250 கி.மீ. வேகத்­தில் காற்று வீசும் என்­றும் அந்த நிலை­யம் முன்­ன­தாகத் தெரி­வித்­தது.

நன்­மா­டோல் புயல் கிழக்கு நோக்­கித் திரும்பி நாளை செவ்­வாய்க்­கி­ழமை தோக்­கி­யோவை எட்­டும் என்­றும் முன்­னு­ரைக்­கப்­பட்டு இருக்­கிறது.

ஜப்­பா­னில் இது புயல் பரு­வம். ஆண்டு­தோ­றும் இந்­தக் கால­கட்­டத்­தில் அந்த நாட்­டில் ஏறக்­கு­றைய 20 புயல்­கள் வீசக்­கூ­டும். அவற்­றால் கடும் மழை, நிலச்­ச­ரிவு, வெள்­ளம் ஏற்­ப­டு­வது வழக்­கம்.

ஆனால் இப்­போ­தைய 14வது புயல்போல் கடும் எச்­ச­ரிக்கை பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக அண்மைக்கால வரலாறு எதுவும் இல்லை என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். புயல் எச்­ச­ரிக்­கையை அடுத்து ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் உறை­வி­டங்­களில் தஞ்­சம் புகுந்து இருக்­கி­றார்­கள்.

பாது­காப்­பான இடங்­க­ளுக்­குச் சென்று­வி­டும்­படி கிட்­டத்­தட்ட நான்கு மில்­லி­யன் மக்­களை அதி­கா­ரி­கள் முன்­ன­தாக வலி­யு­றுத்தி கேட்­டுக்­கொண்­ட­தாக தக­வல்­கள் தெரி­வித்­தன. ஜப்­பா­னிய பிர­த­ம­ரும் மக்­களை எச்­ச­ரித்­தார்.

கியூ­ஷு தீவில் உள்ள ககோஷிமா வட்டாரத்திலும் பக்கத்தில் இருக்கும் மியாஷாகி வட்டாரத்திலும் பேய் மழை, பலத்த காற்று காரணமாக 98,000 வீடு களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அந்தப் பகுதியில் செயல்படும் ரயில் சேவைகள், விமானச் சேவைகள், படகு சேவைகள் அனைத்தும் புயல் கடந்து போகும் வரை ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பலமான காற்று வீசக்கூடும், கடும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு நிலையம் அந்த வட்டாரத்திற்கு முன்னதாக பல முறை எச்சரிக்கை விடுத்தது.

கூடுமானவரை ஆக அதிக விழிப்பு நிலை தேவைப்படுவதாக ஆய்வு நிலை யத்தின் கணிப்புப் பிரிவின் தலைவர் யுட்டா குரோரா சனிக்கிழமை தெரிவித்தார்.

சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்­றுக் காலை 8 மணிக்கு அந்­தப் புயல் ஜப்­பா­னின் யாகூஷிமா தீவுக்கு தென்­கி­ழக்கே 80 கி.மீ. தொலை­வில் மையம் கொண்­டி­ருந்­தது. 252 கி.மீ. வேகத்­தில் அது கரையை நோக்கி நகர்ந்­தது.