தைவான்மீது முன்னெப்போதும் இல்லாத தாக்குதல் நிகழ்ந்தால் அமெரிக்க ராணுவப் படைகள் அத்தீவைத் தற்காத்துப் போரிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். சீனா அதைக் கடுமையாக எதிர்த்துள்ளது.
தைவான் விவகாரம் குறித்து இருநாட்டுப் பதற்றம் அதிகரித்து, தைவான் அருகே சீனா ராணுவப் பயிற்சிகளை நடத்திவரும் நிலையில் திரு பைடன் அவ்வாறு கூறியுள்ளார். சிபிஎஸ் தொலைக்காட்சியின் 'சிக்ஸ்டி மினிட்ஸ்' நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் திரு பைடன் நேர்காணல் அளித்தார்.
தைவான் சுதந்தரம் பெற வேண்டுமா, இல்லையா என்ற கேள்வியை திரு பைடன் தவிர்த்தார்.
ஆனால் சீனா தைவானைத் தாக்கினால் அமெரிக்கப் படைகள் அத்தீவைத் தற்காக்குமா என்ற கேள்விக்கு திரு பைடன், "ஆமாம், முன்னெப்போதும் இல்லாத தாக்குதல் நிகழ்ந்தால்," என்று பதிலளித்தார். உக்ரேனைப் போல் இல்லாமல் அமெரிக்கப் படைகள் களத்தில் இறங்குமா என்று விளக்கம் கேட்கப்பட்டபோது அதிபர் பைடன் மீண்டும் ஆமாம் என்றார்.
இருப்பினும் அந்த நேர்காணலில் முன்னதாக, அமெரிக்காவின் 'ஒரு சீனா' கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று திரு பைடன் கூறியிருந்தார். இதுவரை தைவான்மீதான தாக்குதலில் படைகளை அனுப்பி உதவுவது குறித்து அமெரிக்கா வெளிப்படையாக எதுவும் சொல்லாது இருந்தது.
திரு பைடனின் கருத்துகளுக்கு எதிராக "கடுமையான புகாரை" அமெரிக்காவிடம் தெரிவித்திருப்பதாக சீன வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் நேற்று கூறினார்.
"நாட்டைப் பிரிக்கும் செயல் களுக்குப் பதில்கூறத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும் உரிமை சீனாவுக்குள்ளது," என்றார் அவர். தைவான் விவகாரத்தைக் கவனத்துடனும் முறையாகவும் கையாளும்படி அவர் அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டார்.

